டெல்லியில் தொடர்ந்து அபாய அளவை கடந்து யமுனை நதியில் தண்ணீர் ஓடுவதால், தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
டெல்லியில் வெப்பநிலை குறைந்துள்ளதால், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. யமுனை நதி அபாய கட்டத்தை தாண்டி ஓடுகிறது. காசியாபாத் கிரேட்டர் நொய்டாவுக்குக் கீழே உள்ள பகுதிகளில், ஹிண்டன் ஆற்றின் தண்ணீர் சீறிப்பாய்ந்து ஓடுவதால் அப்பகுதியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் தலைநகர் டெல்லியில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் இன்று காலையில் இருந்து லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் இங்குள்ள யமுனை நதி நீர் மட்டம் 205.33 மீட்டர் அபாய அளவைத் தாண்டி ஓடுகிறது. டெல்லி ரயில்வே பாலத்தில் காலை 10 மணியளவில் உச்ச நீர் மட்டம் 205.59 மீட்டராக உள்ளது என்று மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.
டெல்லியில், சிவில் லைன்ஸ், லக்ஷ்மி நகர் மற்றும் லஜ்பத் நகர் ஆகிய இடங்களில் மழை பெய்தது. மேலும் ஜசோலா மற்றும் ஓக்லா உள்ளிட்ட தேசிய தலைநகரின் சில பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. தேசிய தலைநகர் மற்றும் மேல் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து யமுனை ஆறு கடந்த புதன்கிழமை அன்று மீண்டும் அபாயக் கட்டத்தை தாண்டியது.
இதற்கிடையே, டெல்லி-என்சிஆர் பகுதிகளில் இடைவிடாத மழையைத் தொடர்ந்து யமுனையின் துணை நதியான உத்தரபிரதேசத்தின் நொய்டாவில் உள்ள ஹிண்டன் நதி, கடந்த புதன்கிழமை அன்று அதிகபட்சமாக (HFL) 197.28 மீட்டர் நீர் மட்டத்தை எட்டிய நிலையில், இன்று காலை 9 மணியளவில் 196.55 மீட்டராக நீர்மட்டத்தைப் பதிவு செய்தது.
தேசிய தலைநகரின் சில பகுதிகளில் பகலில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் உத்தரகாண்ட், ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா மற்றும் டெல்லியில் ஜூலை 29 வரை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
நகரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 26.6 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. இது இயல்பை விட அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் காலை 8:30 மணியளவில் ஈரப்பதத்தில் 85% பதிவு செய்யப்பட்டது. தேசிய தலைநகரில் பகலில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். தேசிய தலைநகரில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் பெய்து வரும் கனமழையால் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ள அபாயம் நீடிக்கிறது. மறுபுறம், மும்பையில் பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மழை காரணமாக பல நகரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பல மாநிலங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஹரியானாவின் ஹத்னிகுண்ட் அணையின் நீர்வரத்து நேற்று 28,000 முதல் 41,000 கனஅடி வரை உயர்ந்துள்ளது. இந்த நதிகளின் நீர்மட்டம் உயர்வது டெல்லி-என்சிஆர் பகுதியில் வெள்ள அபாயம் ஏற்படுமோ என்ற அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கிட்டத்தட்ட 1,600 ஹெக்டேர் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும் அப்பகுதியை சுற்றிலும் 3,100க்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட சுமார் 17 கிராமங்கள் இடம்பெயர்ந்து வேறு தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில், உத்திரபிரதேசத்தின் நொய்டா, காஜியாபாத் மற்றும் குருகிராம் ஆகிய இடங்களில் மேலும் 4 நாட்களுக்கு மேல் மிதமான முதல் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா









