ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது விலை குறைந்த எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இன்று விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஓலா எலெக்ட்ரிக், அதன் மூன்றாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இன்று விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே ஓலா நிறுவனம் S1 , S1 புரோ என இரு மாடல்களை விற்பனை செய்து வரும் நிலையில், இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள S1 ஏர் மின்சார ஸ்கூட்டர் 2kWh, 3kWh, மற்றும் 4kWh என மூன்று விதமான பேட்டரி ஆப்ஷனை கொண்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதமே இந்த எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த போவதாக ஓலா நிறுவனம் அறிவித்திருந்ததோடு, முந்தைய மாடல்களை விட சில அம்சங்கள் இதில் குறைவாக இருந்தாலும், மலிவான விலையில் விற்பனைக்கு வரவுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்ததால், இந்த எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மீதான எதிர்பார்ப்பு மக்களிடம் கூடுதலாகவே இருந்தது.
ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொருத்தவரை மூன்று கிலோவாட் ஹவர் பவர் பேட்டரி பேக் கொண்டது. இது முழு சார்ஜர் 125 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 3kWh திறன் பேட்டரி பேக்கை கொண்ட இந்த வாகனத்தை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்ய ஐந்து மணி நேரம் ஆகுமாம். அதே போல் ஸ்டெல்லர் ப்ளூ, நியான், பீங்கான் வெள்ளை, கோரல் கிளாம், லிக்விட் சில்வர் மற்றும் மிட்நைட் ப்ளூ ஆகிய ஆறு வண்ணங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள இந்த ஸ்கூட்டருக்கான புக்கிங் ஏற்கனவே துவங்கி தற்போது மிக தீவிரமாக நடந்து வரும் நேரத்தில், புக்கிங் துவங்கி 1 மணி நேரத்திலேயே கிட்டத்தட்ட 1,000 யூனிட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதாகவும், பிறகு 3 மணி நேரத்திலேயே 3,000 யூனிட்டுகள் முன்பதிவு ஆகி, பலரின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளதாக ஓலா நிறுவனம் கூறியுள்ளது.
ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு தற்போது இந்த ஸ்கூட்டர் ரூ 1.09 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும், இனி வாங்க வருபவர்கள் ரூ 10,000 அதிகம் கொடுத்து இந்த எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்த தகவல்களை ஓலா எலக்ட்ரிக் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான பவிஷ் அகர்வால் தனது சமூகவலைதள பாக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், இந்த எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மீதான எதிர்பார்ப்பு மக்களிடையே மேலும் அதிகரித்துள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா








