அரசாணை 115-ஐ திரும்ப பெற வேண்டும் – டிடிவி தினகரன் வலியுறுத்தல்

அரசுப்பணிகளில் உள்ள லட்சக்கணக்கான காலியிடங்களை நிரப்பும் வேலையை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்துடன் திமுக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.   அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி…

அரசுப்பணிகளில் உள்ள லட்சக்கணக்கான காலியிடங்களை நிரப்பும் வேலையை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்துடன் திமுக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், அரசு வேலைக்காக முயற்சித்துவரும் இளைஞர்களின் கனவில் மண் அள்ளிப்போடும் விதமாக தி.மு.க அரசு செயல்படுவதை ஏற்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்நாடு அரசுப் பணிகளில் உள்ள லட்சக்கணக்கான காலியிடங்களை நிரப்பும் வேலையை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்துடன் தி.மு.க அரசு அரசாணை வெளியிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவது மட்டுமின்றி, பணியிலுள்ள அரசு அலுவலர்களின் செயல்பாடுகளை மதிப்பிடுவதையும் தனியார்மயமாக்க தி.மு.க அரசு, திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அரசு எந்திரத்தின் மூளையாக செயல்படும் அரசு ஊழியர்களை புதிதாக நியமிப்பதையும் ஏற்கனவே இருப்பவர்களை கட்டுப்படுத்துவதையும் தனியாரிடம் ஒப்படைத்துவிட்டால், ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் தனியார் வசம் போய்விடாதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தமிழ்நாட்டையே தனியாருக்கு விற்பதற்குச் சமமாகும். தி.மு.க.வின் போலி திராவிட மாடல் அதைத்தான் செய்ய விரும்புகிறதா? என்ற அவர், தமிழ்நாட்டு இளைஞர்களின் அரசு வேலை கனவைக் குழி தோண்டி புதைக்கும் தி.மு.க அரசின் அரசாணை எண் 115-ஐ உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார். அப்படி செய்யாவிட்டால், அரசு ஊழியர்கள், இளைஞர் சக்தி மற்றும் பொதுமக்களோடு இணைந்து அமமுக தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் என எச்சரிப்பதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.