நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியும் , சட்டமன்றத்தில் 200 தொகுதிக்கும் மேல், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் குனியமுத்தூர் ஹஜ்ரத் நூர்ஷா அவுலிநா தர்காவில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி மீண்டும் அமைந்திட சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிமுகவை சார்ந்த பலர் பங்கேற்றனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்மகன் உசேன், எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக வேண்டியும், வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற வேண்டும் என மக்கள் விரும்பும் நிலையில், மீண்டும் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என வலியுறுத்தியும் அதிமுகவின் 75 மாவட்டங்களில் உள்ள 70 தர்காக்களில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு இருக்கிறோம்.
மிக அதிகமான கழக தொண்டர்கள் சமய வேறுபாடின்றி இந்த பிரார்த்தனை நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். மீண்டும் தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி வரவேண்டும். இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் ஓரே இயக்கம் அதிமுகதான். உலமாக்களுக்கு ஓய்வூதியம் வழங்கிய கட்சி அதிமுக. ரமலான் பண்டிகை, பக்ரீத் பண்டிகை ஆகியவற்றிக்கும், மெக்கா, மதினா செல்லவும், இஸ்லாமியர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கவும் பல உதவிகளை அதிமுக செய்துள்ளது.
திமுக ஆட்சியில் கோவை மாவட்டத்திற்கு இதுவரை ஒரு திட்டம் கூட கொண்டு வரப்படவில்லை. எங்கு பார்த்தாலும் அடக்குமுறை, வன்முறை, பாலியல் வன்முறை என நடைபெறுகிறது. கோவையில் பல இடங்களில் சாலைகள் குளங்களை போல காட்சியளிக்கின்றது. அதிமுக இஸ்லாமியர்களின் பாதுகாப்பு கேடயம். இஸ்லாமியராக இருந்தாலும் எனக்கு மதம், சாதி கிடையாது. பாபுஜி சாமிகள் நமக்கு சித்தப்பாதான். துவா நிகழ்வில் பாபுஜி சாமிகள் கலந்து இருக்கின்றார். ஆன்மீக பயணமாக வந்திருப்பதால் அரசியல் கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ”நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமையும். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும், சட்டமன்ற தேர்தலில் 200க்கும் அதிகமான தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்” என்றும் தெரிவித்தார்.







