அரக்கோணம் அருகே பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய நரிக்குறவர் இன மாணவர்களை, மாவட்ட ஆட்சியரே நேரடியாக பள்ளியில் சேர்த்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் தணிகை போளூர் கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த சிறார்கள் பலர் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது.
நரிக்குறவர் இன மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டபோது நான்கு சிறுமிகளும், ஒரு சிறுவனும் ஐந்தாம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்தியது தெரியவந்தது. நரிக்குறவர் இன குழந்தைகளிடம் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கலந்துரையாடியபோது, அவர்கள் பள்ளிக்குச் செல்ல விருப்பம் தெரிவித்தனர்.
இதையடுத்து, பள்ளி சீருடைகள், புத்தகங்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர், கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பில் மாணவர்களை சேர்த்து விட்டார். மேலும், வகுப்பில் உள்ள மாணவர்களிடம் நரிக்குறவர் இன குழந்தைகளை அறிமுகப்படுத்தி வைத்தார். மாவட்ட ஆட்சியரின் இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.







