பழநி அருகே விவசாய நிலங்களுக்குள் உலா வரும் காட்டு யானைகளால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில், கோம்பைப்பட்டி, ராமப்பட்டணம் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகள் உலா வருவது தொடர்கதையாகி உள்ளது. தற்போது கோடைவெயில் தாக்கம் காரணமாக, வனப்பகுதிக்குள் தண்ணீர் இல்லாததாலும், உணவு பற்றாக்குறை காரணமாகவும் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் நுழையும் காட்டுயானைகள் அங்கு பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், தென்னை, கொய்யா உள்ளிட்ட பயிர்களை உண்பது மட்டுமின்றி சேதப்படுத்தியும் சென்று விடுகிறது.
வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் கிராமங்களுக்குள் வராமல் தடுக்க சில ஆண்டுகளுக்கு முன்பு வனப்பகுதியை ஒட்டி அகழிகள் வெட்டப்பட்டன. அகழிகள் வெட்டியதன் காரணமாக வனவிலங்குகள் குறிப்பாக காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்கப்பட்டது. வனத்துறை சார்பில் வெட்டப்பட்ட அந்த அகழியானது காலப்போக்கில் பராமரிப்பு இன்றி தூர்ந்து போனதால், கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் மீண்டும் கிராமங்களுக்குள் வரத்துவங்கி உள்ளது. இரவுநேரங்களில் வந்து செல்லும் காட்டுயானைகள் தற்போது பகல் நேரங்களிலும் ஊருக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது.
பழனி வனப்பகுதி என்றாலும் ஒட்டன்சத்திரம் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அவர்கள் தகவலறிந்து ஒட்டன்சத்திரத்தில் இருந்து சம்பவ இடத்திற்கு வருவதற்குள், யானைகள் பயிர்களை சேதப்படுத்தி விடுகின்றன. எனவே தூர்ந்து போன அகழிகளை மீண்டும் தூர்வாரி யானைகள் வருவதை தடுக்கவும், பயிர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பி.ஜேம்ஸ் லிசா









