12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், அரசு பள்ளிகளில் 89 புள்ளி 8 சதவீத மாணவர்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95 புள்ளி 99 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கியது. இந்த கல்வியாண்டில் 8.17 லட்சம் மாணவ மாணவிகள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதி உள்ளனர். கடந்த மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை வரை நடைபெற்ற தேர்வு தாள்கள் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை திருத்தப்பட்டன. இதனையடுத்து, தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இருந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டார்.
இதில், தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.03சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 91.45 சதவீதமும் , மாணவிகள் 96.38 சதவீதமும் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இந்த ஆண்டும் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் அதாவது 4.93 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் அதிகளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இதனை தொடர்ந்து, திருப்பூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இந்த நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழகத்தில் 326 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. 2,767 மேல்நிலைப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. மேலும், தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 89 புள்ளி 8 சதவீத மாணவர்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95 புள்ளி 99 சதவீதம் மாணவர்களும், தனியார் பள்ளிகளில் 99 புள்ளி 08 சதவிகித மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- பி.ஜேம்ஸ் லிசா








