பள்ளிப்பாளையத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய ஸ்ரேயா என்ற திருநங்கை மாணவி 337 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 91.45 சதவீதமும் , மாணவிகள் 96.38 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டும் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் அதாவது 4.93 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்த திருநங்கை மாணவி ஸ்ரேயா, +2 பொதுத் தேர்வில் வணிகவியல் பிரிவில் 337 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இதன்மூலம் தமிழ்நாட்டிலேயே பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இதையும் படியுங்கள் : 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெறாதவர்களுக்கு துணைத்தேர்வு ஜூன் 19ல் தொடக்கம்..!
தனது தாய் ராஜேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் கொடுத்த அரவணைப்பால் +2 தேர்வில் தேர்ச்சி பெற முடிந்ததாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஸ்ரேயா, அரசு உதவிக்கரம் நீட்டினால் தம்மால் இதுபோன்று கல்வியில் மேலும் பல சாதனைகளை படைக்க முடியும் என கூறியுள்ளார்.







