கூடலூர் அருகே உள்ள தேவர்சோலை சிறுமுள்ளி பகுதியைச் சேர்ந்த கரியன் என்பவரை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், சில வாரங்களாக நிலவி வரும் வெயில் காரணமாக, செடி கொடிகள் கருகி வனப்பகுதிகள் முழுவதும் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் வனப்பகுதியில் தற்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி குடியிருப்புகள், சாலையோரங்கள் மற்றும் விளை நிலங்களில் உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் வருவது தொடர்கதையாக உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதே போல், நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவர் சோலை பகுதியில் சிறுமுள்ளி கிராமத்தை சேர்ந்த பழங்குடியினர் கரியன் என்பவர் நேற்று இரவு தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். 53 வயதான அவரை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று தாக்கியுள்ளது. காட்டு யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக கிராம மக்கள் உடனடியாக வனத்துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கரியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கடந்த சில நாட்களாக கிராம பகுதியில் இரவு நேரங்களில் உலாவரும் காட்டு யானையை அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்ட வேண்டும் என கிராம மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் காட்டு யானை தாக்கி பழங்குடியினர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.