விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து மூன்று பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி இசிஆர் சாலையில் போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பம் பகுதியில் கடந்த சில நாட்களாக சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வந்தது. இந்நிலையில் மே13 தேதி மாலை கள்ளச்சாராயம் அருந்திய 15க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி,மயக்கம் ஏற்பட்டது.பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும்,முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் சுரேஷ், தரணிவேலு, சங்கர் ஆகிய மூன்று பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் நான்கு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மோசமடைந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட மரக்காணம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பிரபல சாராய வியாபாரி கைது செய்தனர்.
கள்ளச்சாராய விற்பனையினால் பாதிக்கப்பட்ட அப்பகுதி கிராம மக்கள் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் தலைமறைவாக உள்ள பலரை கைது செய்ய வலியுறுத்தி புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
-வேந்தன்







