பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அருகே, தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான சண்டையை தடுக்க முயன்ற மனைவி குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள அகரம்சீகூர் கிராமத்தைச் சேர்ந்த ரெங்கசாமி, வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு, கடந்த 10 நாட்களுக்கு முன் சொந்த ஊர் திரும்பியுள்ளார். வெளிநாட்டில் இருந்து திரும்பிய ரெங்கசாமியிடம் நெல் அறுவடை இயந்திரம் வாங்கித் தருமாறு, அவரது மகன் வெங்கடேசன் கேட்டுள்ளார். ஆனால், ரெங்கசாமி அதற்கு மறுப்பு தெரிவித்ததால், தந்தைக்கும் மகனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கொலை நடந்த அன்று இரவு மதுபோதையில் இருந்த தந்தைக்கும் மகனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் ஒருவரையொருவர் கத்தியாலும், கட்டைகளாலும் மாறி மாறி தாக்கிக் கொண்டுள்ளனர். இந்நிலையில் ரெங்கசாமியின் மனைவி பவானி, தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான சண்டையை தடுக்க முயன்றுள்ளார். அப்போது, கத்தியால் தாக்கப்பட்ட பவானி, படுகாயமடைந்து விழுந்துள்ளார். இதையடுத்து, பவானியை, ரெங்கசாமி, கடலூர் மாவட்டம், திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பவானி ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர். பின்னர் இந்த கொலை குறித்து தகவலறிந்து வந்த போலீசார், பவானியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக, ரெங்கசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







