தவெகவிற்கு ஆதரவு ஏன்…? – இடதுசாரிகள் விளக்கம்…!

விஜய் தலைமையிலான தவெக ஆட்சியமைக்க ஆதரவு கொடுத்து ஏன் என்று சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளது. திமுக கூட்டணியில் இருந்து வந்த இடதுசாரிகள் தவெகவிற்கு ஆட்சியமைக்க ஆதரவு அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் மற்றும் சிபிஐ மாநில செயலாளர் மு. வீரப்பாண்டியான் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:

இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒரே மாதிரி முடிவினை எடுத்துள்ளோம் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சியமைக்க ஆதரவு கோரி விஜய் எங்களுக்கு ஆதரவு கடிதம் அனுபினார். மாநில குழுக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

தவெக பெரும்பான்மையை நிரூபித்தால் மட்டுமே பதவியேற்ற முடியும் என ஆளுநர் சட்டத்திற்கு புறம்பாக பேசியுள்ளார். ஆளுநர் ஆட்சியினை கொண்டு வர முயல்கிறது. பாஜக – அதிமுக ஆட்சியினை காணாமல் போகசெய்வது தான் எங்கள் நோக்கம்.

பாஜகவின் நோக்கத்தை முறியடிக்க தவெக-வை ஆதரித்துள்ளோம். அமைச்சரவையில் பங்கேற்கமாட்டோம் வெளியே இருந்து ஆதரவு கொடுப்போம். ஆளுநர் ஆட்சி வரவிடாமல் தடுக்க ஆதரவு கொடுப்போம்.

மற்றபடி மாநில பிரச்சனைகளில் திமுக கூட்டணியிலேயே தொடர்கிறோம்.

விசிகவும் அதிகாரப்பூர்வமாக தவெக கூட்டணியில் இணையவுள்ளனர். வேறு நிகழ்ச்சியில் உள்ளதால் வரவில்லை 6.30மணியளவில் திருமாவளவன் கம்யூனிஸ்ட் அலுவலகம் வரவுள்ளார்.

பாஜக அரசு மாநில அரசிற்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்த போது நாங்கள் திமுகவோடு இணைந்து எதிர்த்தோம். மக்களின் நலனுக்காகவே நாங்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளோம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.