’இவற்றுக்கு விடைகள் உண்டா?’: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி

கொரோனா தொடர்பாக வெளிநாடுகள் அளித்து வரும் உதவிகள் குறித்து ஏன் வெளிப்படைத்தன்மை இல்லை என மத்திய அரசுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா 2 வது அலை இந்தியாவில்…

கொரோனா தொடர்பாக வெளிநாடுகள் அளித்து வரும் உதவிகள் குறித்து ஏன் வெளிப்படைத்தன்மை இல்லை என மத்திய அரசுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா 2 வது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 3,82,315 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3,780 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதுவரை இந்திய அளவில் 2,06,65,148 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 3,38,439 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து, வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் இதுவரை ஒரு கோடியே 69 லட்சத்து 51 ஆயிரத்து 731 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது நாடு முழுவதிலும் 34 லட்சத்து 87 ஆயிரத்து 229 பேர் கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவுக்காக வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் சேமிப்புக்கான உபகரணங்கள் உள்ளிட்ட உதவிகள் இந்தியாவுக்கு வந்துள்ளன. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத் தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அதில், கொரோனா தொடர்பாக வெளிநாட்டு உதவிகள் குறித்து சில கேள்விகளை மத்திய அரசுக்கு எழுப்ப விரும்புகிறேன். இந்தியாவுக்கு கிடைத்த விநியோகங்கள் என்ன? அவை எங்கு வைக்கப்பட்டுள்ளன? அவற்றால் யார் பயன் பெறுகிறார்கள்? அவை எப்படி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றன? இதில் ஏன் வெளிப்படைத்தன்மை இல்லை? மத்திய அரசே, இவற்றுக்கு ஏதேனும் விடைகள் உண்டா?’ என பதிவிட்டுள்ளார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.