சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “என்னை துரும்பு சீட்டாக பயன்படுத்தி திமுக கூட்டணியை உடைக்க நடந்த முயற்சிகளை தடுத்தேன். தேர்தலுக்கு முன்பு திமுக கூட்டணி உறுதியுடன் இருந்ததற்கு நான் முக்கிய காரணம். திமுக கூட்டணியை காப்பாற்றும் வலிமை எனக்கு இல்லை.
காங்கிரசையோ, முஸ்லிம் லீக்கையோ, இடதுசாரிகளையோ தடுக்கும் வலிமை எனக்கு இல்லை. 30 வருடங்களாக என்னுடன் வன்னி அரசு பயணித்தார். அதற்காக அவருக்கு நான் அமைச்சராக ஆதரவு கொடுத்தேன். திமுக கூட்டணி பிரிந்ததற்கு நான் காரணம் என்று அவதூறு பரப்புவது ஏற்க முடியாது. தற்போதும் சமூக வலைதளங்களில் என்னை மட்டுமே குறி வைப்பது ஏன் என புரியவில்லை. திமுக கூட்டணி வெற்றி பெற என்ன செய்ய முடியுமோ அத்தனை முயற்சிகளையும் செய்தேன்.
எங்களின் நேர்மை, தூய்மையை களங்கப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. தேர்தல் அரசியல் வேண்டாம் என 10 ஆண்டுகளாக இருந்த இயக்கம் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி. தவெக-க்கு ஆதரவு அளிப்பது குறித்த முடிவை எடுக்க நான் எடுத்த காலத்தை குறிப்பிட்டு பலரும் அவதூறு விமர்சனங்களை முன் வைத்தனர். தவெகவிற்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை மிகமிக நிதானமாகத்தான் எடுத்தேன். உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அப்போது முடிவெடுப்போம். தவெகவுடனான கூட்டணி தொடருமா? என்ற கேள்விக்கு தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.







