“நீட் தேர்வை தொடர்ந்து நெட் தேர்விலும் முறைகேடு” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

இனி மாணவர்களின் கூட்டுக்குரல் மட்டுமே கல்விப் புரட்சியைக் கொண்டு வரும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நீட் மற்றும் நெட் தேர்வுகளில் முறைகேடுகள் என அடுத்த டுத்து புகார்கள் எழுந்தாலும், லட்சக்கணக்கான மாணவர்களின் உழைப்பை மதிக்காமல் மத்திய அரசு கண்மூடி தூங்குகிறது. சமூக வலைத்தளங்களில் உலா வந்த 100 பக்க ‘பிடிஎப்’ கோப்பில் இருந்த 90 கேள்விகள், உண்மையான ‘நெட்’ சமூகவியல் தேர்வுதாளுடன் அப்படியே பொருந்தியுள்ளன.

இந்த வினாத்தாள் பீகார், உத்தரப்பிரதேசம், அரியானா, டெல்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தலா ரூ.2.25 லட்சத் திற்கு விற்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இரவு பகலாக படித்த மாணவர்களின் உழைப்பு இந்த அரசுக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை. பிரதமர் மற்றும் கல்வி மந்திரியிடம் இருந்து பொறுப்புணர்வையோ, நீதியையோ எதிர்பார்ப்பது வீண். இனி மாணவர்களின் கூட்டுக்குரல் மட்டுமே கல்விப் புரட்சியைக் கொண்டு வரும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.