கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், “மேகதாதுவில் அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது” என்றும், மத்திய அரசு இதற்கு இறுதி ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் பேசினார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில்,
நாளை டெல்லி செல்லும் தவெக – காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சர் விஜய், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கார்கே ஆகியோரிடம், கர்நாடக காங்கிரஸ் முதலமைச்சர் தமிழகத்துக்கு எதிராகப் பொதுவெளியில் பேசி வருவதை எடுத்துக்கூறி, உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பின்பற்றும்படியும், காவிரி மேலாண்மை ஆணையம் அவ்வப்போது காவிரியில் தண்ணீர் திறந்துவிடப் பிறப்பிக்கும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த அழுத்தம் தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த நிலையில், கர்நாடக முதலமைச்சரின் பேச்சை ஏற்றுக்கொண்டது போல அமைதியாக இருந்த பிரதமரிடம் கேள்வி எழுப்பாமல், எதிர்க்கட்சித் தலைவரிடம் போய்ச் சொல்லுங்கள் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்? என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களே, முன்னாள் முதலமைச்சரான உங்களுக்கு இந்த விவகாரத்தின் உண்மை நிலை என்னவென்று நன்றாகவே தெரியும்.
நீங்கள் முதலமைச்சராக இருந்தபோது, மேகதாது அணைக்கு அனுமதி தரக்கூடாது எனப் பிரதமர் மற்றும் மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சருக்கு மட்டுமே நீங்கள் கடிதம் எழுதினீர்கள். ஏனெனில், இதில் மத்திய அரசுக்கே முழு அதிகாரமும் பொறுப்பும் இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
இப்படி, மேகதாது விவகாரத்தில் மத்திய அரசுக்கே முழு அதிகாரமும் பொறுப்பும் இருக்கிறது என்பதை நன்கு அறிந்த நீங்கள், மைசூருவில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையிலேயே கர்நாடக முதலமைச்சர் பேசியபோது மௌனம் காத்த பிரதமரிடம் ஏன் கேள்வி கேட்கவில்லை? ‘உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படியே நடக்க முடியும், இதை அரசியலாக்கக் கூடாது’ என்று ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல், கர்நாடக முதலமைச்சரின் பேச்சை ஏற்றுக்கொண்டது போல அமைதியாக இருந்த பிரதமரை விட்டுவிட்டு, எதிர்க்கட்சித் தலைவரிடம் போய்ச் சொல்லுங்கள் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்?
தமிழ்நாட்டில் காவிரி உரிமைக்காக நாமும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்தே நிற்க வேண்டும். அதிகாரத்தில் இருக்கும் மத்திய அரசிடமும் பிரதமரிடமும் அழுத்தம் கொடுக்காமல், போகும் ஊருக்கு வழி சொல்லாமல் வேறு ஊருக்கு வழி சொல்வது போலத் திசைதிருப்புவது நியாயமா?”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




