8-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் (Khelo India Youth Games) 2026-ம் ஆண்டு தெலங்கானாவில் நடைபெற உள்ளன. இதற்கான இலச்சினை (Logo) மற்றும் விளையாட்டுத் தூதர் (Mascot) ஆகியவற்றை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, தெலங்கானா முதலமைச்சர் ஏ. ரேவந்த் ரெட்டி ஆகியோர் இன்று அறிமுகப்படுத்தினர். இந்தப் போட்டிகள் டிசம்பர் 11 முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் சுமார் 8,000 வீரர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமரின் விளையாட்டு மேம்பாட்டுத் தொலைநோக்குப் பார்வை!
நிகழ்ச்சியில் பேசிய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பிரதமர் நரேந்திர மோடி இளைஞர்களை விளையாட்டுடன் இணைப்பதற்கும், நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் விளையாட்டை ஒருங்கிணைப்பதற்கும் சிறப்பு முக்கியத்துவம் அளித்து வருவதாகத் தெரிவித்தார். மேலும், இளைஞர்கள் அதிக அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் இளைஞர் விளையாட்டுப் போட்டிகள், கடற்கரை விளையாட்டுப் போட்டிகள், குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பழங்குடியினர் விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.
தெலங்கானாவில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுக்கு பிரதமருக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் தெலங்கானா முதலமைச்சர் ஆகியோர் நன்றி தெரிவித்தனர். மத்திய மற்றும் தெலங்கானா மாநில அரசுகள் இணைந்து இளைஞர்களை விளையாட்டில் ஈடுபட ஊக்குவித்து, நாட்டில் வலுவான விளையாட்டுக் கலாசாரத்தை உருவாக்கப் பாடுபடும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
6 நகரங்களில் 29 விளையாட்டுப் பிரிவுகள்!
தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பேசுகையில், கேலோ இந்தியா போன்ற விளையாட்டுப் போட்டிகள், ‘போதைப்பொருள் இல்லாத இளைஞர்கள் மூலம் வளர்ச்சியடைந்த பாரதம்’ (Nasha Mukt Yuva for Viksit Bharat) என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்ல உதவும் என்றார். மேலும், இளைஞர்கள் போதைப்பொருள் பழக்கம் உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளில் இருந்து விலகி இருக்க இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகள் ஊக்கமளிக்கும் என்றும் குறிப்பிட்டார். இந்தப் போட்டிகள் ஹைதராபாத், கம்மம், கரீம்நகர், ஹனம்கொண்டா, மகபூப்நகர் மற்றும் நிஜாமாபாத் ஆகிய 6 நகரங்களில் நடைபெற உள்ளன. மொத்தம் 29 விளையாட்டுப் பிரிவுகள் இடம்பெறுகின்றன. இதில் 27 போட்டி விளையாட்டுப் பிரிவுகளும், 2 செயல்விளக்க விளையாட்டுப் பிரிவுகளும் அடங்கும்.
போட்டி விளையாட்டுப் பிரிவுகள்:
வில்வித்தை, தடகளம், பூப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, சைக்கிள் பந்தயம், வாள்வீச்சு, கால்பந்து, கட்கா, ஜிம்னாஸ்டிக்ஸ், ஹாக்கி, ஜூடோ, கபடி, களரிப்பயட்டு, கோ-கோ, மல்லகம்பம், படகுப் போட்டி, துப்பாக்கிச் சுடுதல், நீச்சல், சாப்ட்பால், மேசைப்பந்து, டென்னிஸ், தாங்-டா, கைப்பந்து, பளுதூக்குதல், மல்யுத்தம் மற்றும் யோகாசனம் ஆகியவை இடம்பெறுகின்றன.
செயல்விளக்க விளையாட்டுகள்:
பாய்மரப் படகுப் போட்டி (Sailing) மற்றும் கர்ரா சாமு (Karra Samu) ஆகியவை செயல்விளக்க விளையாட்டுகளாக இடம்பெற உள்ளன. இதில் சாப்ட்பால் விளையாட்டு முதல்முறையாகப் போட்டிப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல், பாய்மரப் படகுப் போட்டி மற்றும் கர்ரா சாமு ஆகியவையும் முதல்முறையாக செயல்விளக்க விளையாட்டுகளாக அறிமுகமாகின்றன.
இலச்சினையில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள்!
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளுக்கான இலச்சினை, தெலங்கானாவின் பாரம்பரியப் பண்பாட்டையும் விளையாட்டுத் துறையின் எதிர்காலக் கனவுகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் 8 முக்கிய அம்சங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. காவி மற்றும் பச்சை நிறங்களில் இடம்பெற்றுள்ள கேலோ இந்தியா சின்னம், தேசிய விளையாட்டுத் திட்டம், இளைஞர்களின் ஆற்றல் மற்றும் முன்னேற்றத்தைக் குறிக்கிறது. ஹைதராபாத்தின் எதிர்காலத் தொலைநோக்குப் பார்வை, அமைதி மற்றும் ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் வகையில் பாபு காட் பகுதியில் அமைக்கப்பட உள்ள காந்தி சரோவரின் ஒரு பகுதியாக இருக்கும் காந்தி கோபுரம் இடம்பெற்றுள்ளது. தெலங்கானாவின் பாரம்பரியப் பெருமையையும் வரவேற்பு உணர்வையும் வெளிப்படுத்தும் வகையில் காகத்திய கலா தோரணம் இடம்பெற்றுள்ளது. ஹுசைன் சாகரில் உள்ள புத்தர் சிலை அமைதி, ஒழுக்கம் மற்றும் மன அமைதியைப் பிரதிபலிக்கிறது.
அதேபோல், தெலங்கானாவின் பண்பாட்டு அடையாளமான தங்கேடு மலர், பதுக்கம்மா திருவிழாவின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கிறது. ஏழு விளையாட்டு வீரர்களின் உருவங்கள் விளையாட்டுத் துறையின் வளர்ச்சியை வெளிப்படுத்துகின்றன. நீலம், பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களில் அமைந்துள்ள சுற்றுவட்ட வடிவம் இயக்கம், ஆற்றல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய விளையாட்டு உணர்வைக் குறிக்கிறது. இதன் வாசகமாக “Khel Ka Junoon, Telangana Ki Jaan Aur Pehchaan” இடம்பெற்றுள்ளது. விளையாட்டின் மீதான ஆர்வம் தெலங்கானாவின் அடையாளத்துடன் ஒன்றிணைந்திருப்பதை இந்த வாசகம் உணர்த்துகிறது.
‘நீலமணி’ – கேலோ இந்தியா விளையாட்டுத் தூதர்!
இந்தப் போட்டிகளின் விளையாட்டுத் தூதராக ‘நீலமணி’ (Neelamani) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இளைஞர்களின் ஆற்றல், சுறுசுறுப்பு, விடாமுயற்சி மற்றும் விளையாட்டு உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கலாசார வேர்களின் மீதான பெருமையையும், வலிமையான, ஆரோக்கியமான, ஒற்றுமையான இந்தியாவை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையையும் நீலமணி வெளிப்படுத்துகிறது.
இதன் தலையிலுள்ள கொண்டை ஆற்றல் மற்றும் முன்னேற்றத்தையும், கண்கள் கவனம், புத்திசாலித்தனம் மற்றும் உற்சாகத்தையும் குறிக்கின்றன. அலகு உறுதிப்பாடு மற்றும் தலைமைப் பண்பையும், நீலம் மற்றும் நீலப்பச்சை நிற இறகுகள் துடிப்பு, சுதந்திரம் மற்றும் தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்துகின்றன. உற்சாகம் (Vibrant), துணிச்சல் (Courageous), சுறுசுறுப்பு (Agile), பெருமை (Pride) ஆகிய நான்கு முக்கியப் பண்புகளின் அடையாளமாக நீலமணி விளங்குகிறது.
இந்த அறிமுக நிகழ்ச்சியில் தெலங்கானா விளையாட்டுத்துறை அமைச்சர் வகிட்டி ஸ்ரீஹரி, நீர்ப்பாசனத்துறை அமைச்சர் என். உத்தம் குமார் ரெட்டி, விளையாட்டுத்துறை அரசு ஆலோசகரும் தெலங்கானா ஒலிம்பிக் சங்கத் தலைவருமான ஏ.பி. ஜிதேந்தர் ரெட்டி, தெலங்கானா தலைமைச் செயலாளர் சஞ்சய் ஜாஜு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.மேலும், இந்திய விளையாட்டு ஆணையத்தின் (SAI) தலைமை இயக்குநர் ஹரி ரஞ்சன் ராவ் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.





