பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தூரத்தை நெருங்கும் வாயேஜர் 1!

விண்வெளி ஆராய்ச்சியில் புதிய வரலாற்றுச் சாதனை படைக்கத் தயாராகிறது நாசாவின் வாயேஜர் 1 விண்கலம். பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தொலைவை நெருங்கும் முதல் மனிதனால் உருவாக்கப்பட்ட விண்வெளிப் பொருள் என்ற பெருமையைப் பெறவுள்ளது.

என்ன இந்த ஒரு ஒளி நாள் தூரம்?

ஒளி ஒரு வினாடியில் சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் பயணிக்கும். அந்த வகையில், ஒளி ஒரு நாளில் கடக்கும் தொலைவு சுமார் 2590 கோடி கிலோமீட்டர்கள் ஆகும். வாயேஜர் 1 விண்கலம் இந்தத் தொலைவை எட்டும்போது, அதிலிருந்து அனுப்பப்படும் ரேடியோ சமிக்ஞைகள் பூமியை வந்தடைய 24 மணி நேரம் எடுத்துக்கொள்ளும். அதாவது, பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தொலைவில் வாயேஜர் 1 இருக்கும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை நவம்பர் 18-ஆம் தேதி எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு ஒளி ஆண்டு தொலைவை எட்ட 18,000 ஆண்டுகள்!

வாயேஜர் 1 விண்கலம் தற்போது மணிக்கு சுமார் 61,000 கி.மீ. வேகத்தில் விண்வெளியில் பயணித்து வருகிறது. இதே வேகத்தில் தொடர்ந்து பயணித்தாலும், ஒரு ஒளி ஆண்டு தொலைவை எட்டுவதற்கு இன்னும் சுமார் 18,000 ஆண்டுகள் ஆகும் என நாசா கணித்துள்ளது. அதேபோல், அருகில் உள்ள மற்றொரு நட்சத்திரத்தை நெருங்குவதற்கு இதைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமான காலம் தேவைப்படும்.

1977-ல் தொடங்கிய வரலாற்றுப் பயணம்!

நாசாவின் வாயேஜர் 1 விண்கலம் 1977-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இதன் இரட்டை விண்கலமான வாயேஜர் 2, அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே ஏவப்பட்டது. வாயேஜர் 1, 1979-ஆம் ஆண்டு வியாழன் கோளையும், 1980-ஆம் ஆண்டு சனி கோளையும் கடந்து சென்று முக்கியமான அறிவியல் தகவல்களைப் பூமிக்கு அனுப்பியது. தொடர்ந்து சூரியக் குடும்பத்தின் எல்லையைத் தாண்டி, 2012-ஆம் ஆண்டு நாசா வரையறுத்துள்ள நட்சத்திரங்களுக்கு இடையேயான விண்வெளிப் பகுதியை (Interstellar Space) அடைந்தது. அதேபோல், வாயேஜர் 2 வியாழன், சனி மட்டுமின்றி யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்களையும் ஆய்வு செய்துள்ளது.

2035-ல் ஒரு ஒளி நாள் தொலைவை எட்டும் வாயேஜர் 2!

வாயேஜர் 1-ன் இரட்டை விண்கலமான வாயேஜர் 2, பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தொலைவை 2035-ஆம் ஆண்டில்தான் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளாக விண்வெளியில் பயணித்து வரும் இந்த இரண்டு விண்கலங்களிலும் அவ்வப்போது தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டாலும், தொடர்ந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தகவல்களைப் பூமிக்கு அனுப்பி வருகின்றன.

வாயேஜரைக் கொண்டாட நாசாவின் சிறப்பு முயற்சி!

இந்த வரலாற்றுச் சாதனையைக் கொண்டாடும் வகையில், உலகம் முழுவதும் உள்ள மக்கள் தங்களது செல்போன் அல்லது மின்விளக்குகளைப் பயன்படுத்தி தங்க நிற ஒளியை உருவாக்குமாறு நாசா அழைப்பு விடுத்துள்ளது. நவம்பர் 17 – செவ்வாய்க்கிழமை சூரியன் மறைந்த பிறகு, மோர்ஸ் குறியீட்டு முறையில் V-G-R என்ற எழுத்துகளை ஒளியின் மூலம் வெளிப்படுத்தி வாயேஜர் 1 விண்கலத்தின் சாதனையைக் கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

வாயேஜர் திட்டத்தின் மேலாளர் சுசேன் டாட், இந்த விண்கலத்தை பூமியின் தூதராக வர்ணித்துள்ளார். மேலும், இது ஒரு தேசியப் பொக்கிஷம் என்றும், மனிதகுலத்திற்கு வியப்பையும் பிரமிப்பையும் ஏற்படுத்தும் மிகச் சிறப்பான விண்வெளித் திட்டம் என்றும் தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாகப் பயணித்து வரும் வாயேஜர் 1, மனிதகுலத்தின் அறிவியல் தேடலுக்கும் விண்வெளி ஆராய்ச்சிக்கும் ஒரு மகத்தான அடையாளமாகத் தொடர்ந்து விளங்குகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.