டாஸ்மாக் பராமரிப்புக்கு TNMSC நிதியா? தமிழக அரசு விளக்கம்!

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மருத்துவ சேவைக்கான அரசு நிதி, டாஸ்மாக் நிறுவனத்திற்குப் பயன்படுத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில், இந்தத் தகவல் தவறானது எனத் தமிழ்நாடு அரசின் தகவல் நம்பகத்தன்மை பிரிவு (TN Fact Check) விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் TN Fact Check வெளியிட்டுள்ள விளக்கம்:

மருத்துவ சேவை அரசு பணம் டாஸ்மாக்கிற்கு பயன்படுத்தப்படுவதாக பரவும் தவறான தகவல்
உண்மை என்ன ?

“தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (TNMSC) மாநிலம் முழுவதும் 38 கிடங்குகளை இயக்கி வருகிறது. இதில் ஐந்து உதவிப் பொறியாளர்கள் கொண்ட ஒரு சிவில் பிரிவு உள்ளது. அந்தப் பிரிவிற்கு மேலும் ஏழு உதவிப் பொறியாளர்கள் நியமிக்கப்பட உள்ள நிலையில், அதற்கான நிதியை டாஸ்மாக் நிறுவனம் வழங்குகிறது.

சிவில் பிரிவை வலுப்படுத்த உதவும் இந்த நடவடிக்கைக்கு, இரு அரசு நிறுவனங்களும் ஒப்புதல் அளித்துள்ளன. இந்த ஏற்பாட்டின் ஒரு பகுதியாக, சில டாஸ்மாக் கிடங்குகளின் பராமரிப்புப் பணிகளை மட்டும் மருத்துவப் பணிகள் கழகம் மேற்கொள்ளவுள்ளது.

பழுதுபார்ப்பு மற்றும் புதுப்பித்தல் பணிகளுக்கான செலவுகளை டாஸ்மாக் நிறுவனமே ஏற்றுக்கொள்ளும். இதனால் மருத்துவப் பணிகள் கழகத்தின் நிதியை பயன்படுத்த வேண்டிய தேவையில்லை.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.