2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் மீண்டும் இடம்பெற உள்ள நிலையில், அதற்கான இறுதிக்கட்டத் தகுதிச் சுற்றுப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பு வங்கதேசம் மற்றும் அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆடவர் தகுதிச் சுற்று வங்கதேசத்திலும், மகளிர் தகுதிச் சுற்று அமெரிக்காவிலும் நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 15) அறிவித்துள்ளது.
தகுதிச் சுற்று நடைபெறும் தேதி
ஆடவர் தகுதிச் சுற்றுப் போட்டிகள் 2028-ம் ஆண்டு பிப்ரவரி 5 முதல் 13-ம் தேதி வரை வங்கதேசத்தில் நடைபெறவுள்ளன. மகளிர் தகுதிச் சுற்றுப் போட்டிகள் பிப்ரவரி 26 முதல் மார்ச் 5-ம் தேதி வரை அமெரிக்காவில் நடைபெறுகின்றன.
இரு பிரிவுகளிலும் தலா 8 அணிகள் பங்கேற்கும். அவை இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அணியும் தனது குழுவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். குழுவில் முதலிடம் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும். இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி, ஒலிம்பிக் போட்டிக்கான கடைசி இடத்தைப் பிடிக்கும்.
128 ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட்
கிரிக்கெட் கடைசியாக 1900-ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் இடம்பெற்றது. அதன்பிறகு 128 ஆண்டுகள் கழித்து, 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் மீண்டும் இடம்பிடித்துள்ளது. இதில் ஆடவர் மற்றும் மகளிர் டி20 போட்டிகள் நடைபெறவுள்ளன.
லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் தலா 6 அணிகள் பங்கேற்கும். ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, ஓசியானியா ஆகிய கண்டங்களுக்கு பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய மகளிர் அணி தகுதி
இந்திய மகளிர் அணி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பையில் ஆசிய அணிகளில் சிறந்த இடத்தைப் பிடித்ததன் மூலம் ஏற்கெனவே ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, கிரேட் பிரிட்டன் அணிகளும் கண்டங்களுக்கான தகுதிப் பாதை மூலம் இடம்பிடித்துள்ளன.
இந்திய ஆடவர் அணியும் நேரடியாகத் தகுதி பெற வாய்ப்புள்ளது. 2026 டிசம்பர் 31-ம் தேதி நிலவரப்படி உள்ள ஐசிசி டி20 தரவரிசையின் அடிப்படையில், தகுதிபெறத் தகுதியுள்ள ஒவ்வொரு கண்டத்திலும் முதலிடத்தில் இருக்கும் அணிக்கு நேரடி வாய்ப்பு வழங்கப்படும். போட்டியை நடத்தும் அமெரிக்க அணியும், ஐசிசியின் தரவரிசைத் தகுதிகளைப் பூர்த்தி செய்தால் ஒலிம்பிக் வாய்ப்பைப் பெற முடியும்.
மற்ற போட்டிகளுக்கான அறிவிப்பு
2027-ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் 10 அணிகள் பங்கேற்று 23 போட்டிகளில் விளையாடும். இதில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைக்குத் தகுதி பெறும். தகுதிச் சுற்றில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக உலகக் கோப்பையின் குழுநிலைக்குச் செல்லும்.
அதேபோல், 2028-ம் ஆண்டின் முதல் காலாண்டில் நடைபெறவுள்ள ஆடவர் டி20 உலகக் கோப்பை உலகளாவிய தகுதிச் சுற்றில் 16 அணிகள் பங்கேற்று 31 போட்டிகளில் விளையாடும். இதில் 8 அணிகள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இணைந்து நடத்தும் டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெறும்.




