அனைத்து விவகாரத்திலும் மத்திய அரசு தலையிட்டால் டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதற்கு? என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. பொறுப்பு துணை நிலை ஆளுநராக வினய் குமார் சக்ஷேனா நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே டெல்லி மாநில அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
250 மாமன்ற உறுப்பினர்களை கொண்ட டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் கடந்த ஜனவரி 6ம் தேதி நடைபெற இருந்தது. இதில் மேயர் வேட்பாளருக்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஷெல்லி ஓபராய் மற்றும் பாஜக சார்பில் ரேகா குப்தாவும் முன்மொழியப்பட்டுள்ளனர். அதேபோல துணை மேயர் பதவிக்கு ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் ஜலஜ் குமார் மற்றும் பாஜக சார்பில் கமல் பக்ரியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
லெப்டினண்ட் கவர்னர் வினய் குமார் சக்ஷேனாவால் நியமிக்கப்பட்ட சபாநாயகர் சத்யா சர்மா முன்மொழியப்பட்ட உறுப்பினர்களை பதவியேற்க அழைக்காமல் நியமன உறுப்பினர்களை ஆல்டெர்மென்களாக பதவியேற்க அழைத்தார். இதனை ஆத்திரமடைந்த ஆம் ஆத்மி உறுப்பினர்கள் கவர்னருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இருதரப்பிற்கும் இடையே மேயர் அலுவலகத்திலேயே அடிதடி நடைபேற்று தேதி குறிப்பிடாமல் மேயர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் டெல்லி மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே டெல்லி மாநில துறைகளில் மத்திய அரசின் தலையீடு மற்றும் வரம்புகள் தொடர்பான மனு மீதான விசாரணை கடந்த மூன்று நாட்களாக நடந்து வருகிறது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, டெல்லி என்பது தேசிய தலைநகராக இருப்பதால் அது ஒரு “தனித்துவ அந்தஸ்து” பெறுகிறது. மேலும் இங்கு அனைத்து மாநிலங்களின் குடிமக்களும் வாழ்ந்து வருகிறார்கள். டெல்லியில் அனைவருக்குமான உரிமை இருக்கிறது என்கிற உணர்வு எழ வேண்டும். மேலும் டெல்லி என்பது இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகிற ஒரு காஸ்மொபொலிட்டன் நகரம். இது இந்தியாவுக்கு சொந்தமானது என்றார்.
நேற்று நடந்த விசாரணையின் போது, நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முராரி, ஹிமா கோஹ்லி மற்றும் பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு, டெல்லி அரசு சட்டங்களை இயற்ற முடியாத விஷயங்களைக் குறிப்பிட்டு, தலைநகர் டெல்லியில் சேவைகளை நிர்வகிப்பது தொடர்பான சட்ட மற்றும் அரசியலமைப்பு நிலை குறித்து கருத்து கேட்டது.
மாநிலத்தின் அதிகாரம் செலுத்தும் வகையில் மற்றும் ஒரே நேரத்தில் (7வது அட்டவணையின் படி) சட்டமியற்றும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உள்ளது. ஆனால் மாநிலப் பட்டியலில் உள்ள பிரிவு 1,2,18,64, 65 (பொது ஒழுங்கு, காவல் மற்றும் நிலம் போன்றவை) பட்டியல்களில் சட்டம் இயற்றும் அதிகாரம் டெல்லி சட்டமன்றத்திற்கு இல்லை” என்று நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டது. மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திற்குப் பொருந்தக்கூடிய சட்டங்களை இயற்றும் அதிகாரம் டெல்லி சட்டமன்றத்திற்கு நிச்சயமாக உள்ளது என்று கூறியது.
இதற்கு பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா யூனியன் பிரதேசங்கள் என்பது மத்திய அரசின் விரிவக்காம் தான். புவியியல் தன்மையில் யூனியன் பிரதேசங்களை பிரித்ததே மத்திய அரசு யூனியன் பிரதேசங்களை நிர்வகிப்பதற்காகத்தான் என்று வாதிட்டார்.
அப்படியெனில் பிறகு எதற்கு டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு..? மத்திய அரசு மட்டுமே அதிகாரம் செலுத்தினால் பிறகு எதற்கு அங்கு அரசாங்கம் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.