அமமுக துணைப்பொதுச்செயலாளர் மாணிக்கராஜாவை, கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். இதுதொடர்பாக அமமுக தலைமை கழகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், “கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரனான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழக துணைப் பொதுச்செயலாளர் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பம் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அமமுக துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து மாணிக்க ராஜா நீக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அவருடன் தென்மாவட்டங்களைச் சேர்ந்த சில மாவட்டச் செயலாளர்களும் தி.மு.க.வில் இணைந்தனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்க ராஜா, “அமமுக எதற்காக தொடங்கபட்டது என்பது அனைவருக்கும் தெரிந்தது. 8 ஆண்டுகாலம் அனைவரும் உழைத்து வளர்த்த அமமுக இன்று பழைய நிலைக்கு அழைத்து சென்றுள்ளார். அர்த்தமே இல்லாத முடிவை டிடிவி தினகரன் எடுத்த காரணத்தால் தொண்டர்கள், மாவட்ட செயலாளர்கள் விருப்பபடி திமுகவில் இணைந்து உள்ளோம்.
என்டிஏ கூட்டணியில் சேர்ந்ததிற்கு என்ன அழுத்தங்கள் உள்ளது என்பது எங்களுக்கு தெரியாது. இது நமக்கு ஆபத்தில் முடியும் என தொண்டர்கள் கூறியும் டிடிவி தினகரன் தொண்டர்களின் பேச்சை கேட்கவில்லை. அதிமுக, அமமுக இணைந்து களத்தில் பணியாற்ற முடியாது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இணைவதை தொண்டர்கள் விரும்பவில்லை. எந்த நிபந்தனையும் இல்லாமல் திமுகவில் இணைந்துள்ளேன். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக, அமமுக இருவரும் இணைந்து பணியாற்ற வாய்ப்பே இல்லை. அதிமுகவை அமமுகவும், அமமுகவை அதிமுகவும் மாறி மாறி கவிழ்த்து விடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.







