காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் ஏன் என்ற கேள்விக்கு சுவாரசியமான தகவல்கள் கிடைத்துள்ளன. நாடு முழுவதும் காலியாகி உள்ள ராஜ்யசபா உறுப்பினர்களில் 10 பேர் மட்டுமே காங்கிரஸ் சார்பில் வெற்றி பெறக்கூடிய சூழல் உள்ளது.
இந்த பத்து சீட்டிற்கும், 40 முதல் 50 பேர் வரை தங்களுக்கு தெரிந்த பல்வேறு சோர்ஸ்கள் மூலம் முயற்சித்துள்ளனர். இதில் தமிழகத்தில் இருந்து காலியாகவுள்ள 6 ராஜ்யசபா சீட்டுகளில் திமுக கூட்டணிக்கு நான்கு கிடைக்கும் சூழல் இருந்தது. இதில் ஒரு சீட்டை கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாகவும், மற்ற இடங்களில் திமுக சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என அக்கட்சி அறிவித்தது. இப்படி அறிவிப்பு வந்த மறுநாளே திமுக தனது வேட்பாளர் பட்டியலையும் அறிவித்துவிட்டது. அதிமுக சார்பில் இருவர் போட்டியிடக்கூடிய சூழலில், நீண்ட இழுபறிக்கு பிறகு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான சிவி சண்முகத்திற்கும், ஓபிஎஸ் ஆதரவாளரான தர்மருக்கும் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் சார்பில் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் என்ற தகவல்கள் கசிந்தன. நாம் விசாரித்தவரையில், அக்கட்சியின் மாநில தலைவராக இருக்கும் கே.எஸ். அழகிரி தமக்கு ராஜ்யசபா சீட் வேண்டும் என கேட்டு தலைமைக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் தலைமையோ இந்த முறை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் பெயரை டிக் அடித்துவிட்டதாம் அப்புறம் அறிவிப்பதில் தாமதம் ஏன் என விசாரித்த வரையில், மாநில கட்சிகள் போல் தேசிய கட்சிகள் நடந்து கொள்ள இயலாது எனவும், எல்லா மாநிலங்களிலும் வேட்பாளர்களை தேர்வு செய்த பின்னரே மொத்தமாக அனைத்து வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட முடியும். இதுவே தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் ராஜ்யசபாவிற்கு செல்லும் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க தாமதம் என தெரிகிறது. அதேபோல், இந்த முறை ராஜ்யசபா சீட் கேட்ட அழகிரிக்கு விரைவில் நல்ல பதவி ஒன்று வழங்கப்படும் எனத் தெரிகிறது.







