தமிழ்நாட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கப்படவும், அடிக்கல் நாட்டுவதற்காகவும் பிரதமர் மோடி சென்னை வந்திருந்தார். இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், ஆளுநர் கேஎன் ரவி, மத்திய இணையமைச்சர் எல் முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த விழாவானது நேரு அரங்கில் நடைபெற்றது. இதில் சில நிமிடங்கள் மட்டுமே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைகாட்டினார். மோடி விழாவை விட அவருக்கு வேறு என்ன முக்கிய பணி, அவசர அவசரமாக அவர் எங்கு சென்றார் என்பது குறித்து விவரிக்கிறார் இராமானுஜம்.
சென்னை விமானநிலையத்திற்கு வந்து இறங்கிய பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள்தனித்தனியே சந்தித்து சில நிமிடங்கள் பேசினர். ஆளுநர் கேஎன் ரவி, பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் சாலைமார்க்கமாக விழா நடைபெறும் நேரு விளையாட்டு அரங்கிற்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். அங்கு வந்த தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சில நிமிடங்களிலேயே அங்கிருந்து வெளியே புறப்பட்டு சென்றார். முதலமைச்சர் பேச்சையோ, பிரதமரின் பேச்சையோ அவர் கேட்கவில்லை. அவை எல்லாவற்றையும் மொபைல்போன் மூலம் இணையத்தில் பார்த்து அறிந்து கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இப்படி அவர் அவசர அவசரமாக எங்கு புறப்பட்டு சென்றார் என்று விசாரித்தபோது, சென்னை விமானநிலையத்திற்குதான் திரும்பி சென்றார் என அவருடன் நெருக்கமாக இருப்பவர்கள் தெரிவித்தனர்.மேலும் அவர்கள் கூறியதாவது, பிரதமர் மோடி டெல்லி செல்வதற்கு முன்னர் தமிழகத்தில் உள்ள விஐபிகளை சந்திக்க திட்டமிட்டிருந்தார். அவர்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பு அண்ணாமலைக்கு வழங்கப்பட்டிருந்தது. அதன்படி பிரதமர் மோடியை மதுரை ஆதினம் சந்தித்துள்ளார். அவர் திமுக ஆட்சிக்கு வந்தபின்னர் தமிழகத்தில் ஆன்மீகவாதிகளுக்கு பாதுகாப்பில்லை என புகார் கூறியதாக தெரிகிறது.
அதேபோல் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள், அதிமுகவில் உள்ள மொத்த மூத்த நிர்வாகிகளும் பிரதமர் மோடியை சந்தித்துள்ளனர். ஓபிஎஸ்-ஈபிஎஸில் தொடங்கி முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், வேலுமணி, தங்கமணி, கேபி முனுசாமி என ஒவ்வொருவரிடமும் சில நிமிடங்கள் மோடி தனித்தனியே பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது மத்திய இணையமைச்சர் எல் முருகன், தமிழக பாஜக பொறுப்பாளர் சிடி ரவி, சுதாகர் ரெட்டி ஆகியோர் உடனிருந்துள்ளனர்.
அதன்பிறகுமுதலமைச்சர் ஸ்டாலினின் மேடை பேச்சு குறித்து பிரதமர் மோடியிடம் அண்ணாமலை விவாதித்துள்ளார். பிரதமரின் அட்வைஸ் படியே விமானநிலையத்தில் செய்தியாளர்களை அண்ணாமலை சந்தித்தாக தெரிகிறது. அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி மூலம் பல முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல், பல திட்டங்கள் அர்ப்பணிப்பு இன்று செய்யப்பட்டுள்ளது.அடுத்தகட்ட தமிழகத்தை உருவாக்குவதற்காக பிரதமர் மோடி வந்துள்ளார். ஒரு மாநில முதல்வர் எப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதற்கு சான்று இன்று தமிழக முதல்வர் நடந்து கொண்ட விதம் என்றார்.
மேலும் பிரதமரை மேடையில் அமரவைத்துவிட்டு முதல்வர் பேசிய பேச்சு அரசியல் அநாகரியம். கச்சத்தீவை தாரை வார்த்துவிட்டு என்ன தைரியத்தில் பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை வைக்கிறார். கச்சத்தீவை மீட்டுத்தர கோரிக்கை வைக்கும் தகுதி மு.க.ஸ்டாலினுக்கு கிடையாது. எப்படி ஜி எஸ் டி கவுன்சில் நடக்கிறது என்பது கூட தெரியாமல் முதல்வர் பேசியது தமிழகத்தை அவமானப்படுத்துவது போல் உள்ளது. தமிழகம் மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டிய பணம், 25 ஆயிரம் கோடி, இதனை நிதியமைச்சரை மறுக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம் . இதனை மேடையில் முதலமைச்சர் சொல்லியிருக்கலாமே ? என வினவினார்.
தமிழகத்தையும் இந்தியாவையும் பிரதமர் தரம் பிரித்து பார்த்ததில்லை. முதலமைச்சர் பேசுன அனைத்துமே பொய், முன்னுக்கு பின் முரணான தகவலை பேசிவிட்டு திராவிட மாடல் என்கிறார் என காட்டமாக கூறினார்.
அண்ணாமலை இப்படி டாப் கியரில் திமுகவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதால் பாதிப்பு என்னவோ ? அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்குதான், எங்களுக்கு ஒன்றும் இல்லை என திமுகவினர் இதனை லைட் வெயிட்டாக எடுத்துக்கொண்டுள்ளனர். மேலும், தமிழ்நாடு என்பது என்றுமே திராவிட பூமிதான் என திமுக நிர்வாகிகள் கூறுகின்றனர்.
இராமானுஜம்.கி