கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக திமுகவை அதிமுக ஆதரித்ததாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை எனக் கூறி அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பெரியகுளத்தில் தன் வீட்டு முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு, மகளிருக்கு ஊக்கத்தொகை ஆகிய வாக்குறுதிகளை திமுக அரசு அமுல்படுத்தவில்லை என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன 55 வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை எனவும், ஜனநாயக விரோத போக்கை கடைபிடித்து வருவதாகவும், மக்களின் கோரிக்கைகளை அதிமுக அரசு 10 ஆண்டுகால ஆட்சியில் நிறைவேற்றியது என்றும், திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை மக்கள் நம்பியதால் திமுக வெற்றி பெற்றது என்றும் குறிப்பிட்டார்.
வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திமுக பின் வாங்கி வருகிறது எனக் குற்றம்சாட்டிய அவர், “கொரானா பணிகளுக்காக திமுகவை நாங்கள் ஆதரித்தோம்” என்றும் குறிப்பிட்டார். நான்கரை ஆண்டுகளாக இருவரும் அதிமுகவை வழி நடத்தி வருவதாகவும், கட்சியை தனிப்பட்ட குடும்பம் வழி நடத்த முடியாது என்றும், அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது என்றும் கூறினார்.








