மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டில் அரிசி விலை உயரும் – அன்புமணி ராமதாஸ்….!

மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டில் அரிசி விலை உயரும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்தக் கோரி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று அவர் திருப்பூர் மாவட்டத்தில் நடை பயணத்தை தொடர்ந்தார்.

அப்போது பொதுமக்களிடம் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

கர்நாடகா நினைப்பது போல மேகதாதுவில் அணைக் கட்டி விட்டால் நமக்கு நீர் வரத்து இருக்காது. அதன் காரணமாக நம்மால் விவசாயம் செய்ய முடியாது. தற்போது ரூ. 30-க்கு கிடைக்கும் அரிசியின் விலை ரூ. 300 -ஆக உயரும் அபாயம் இருக்கிறது.

ஏற்கனவே நம்முடைய டெல்டாவில் விவசாய பரப்பு 29 லட்சம் ஏக்கரில் இருந்து 20 லட்சம் ஏக்கராக சுருங்கி விட்டது. கர்நாடகத்திலிருந்து தண்ணீர் வரத்து குறைந்தால் அது 8 லட்சம் ஏக்கராக குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நமக்கு மிகப்பெரிய அரிசி பற்றாக்குறை ஏற்படும்.

2016ல் இதே போன்ற ஒரு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டபோது கோயம்புத்தூரில் ஒரு லட்சம் டிராக்டர்கள் உற்பத்தி செய்த இடத்தில் 40,000 டிராக்டர்கள் மட்டுமே உற்பத்தி செய்ய முடிந்தது. எனவே தண்ணீர் பற்றாக்குறை என்பது உணவை மட்டும் பாதிக்காமல் உற்பத்தியையும் நம்முடைய பொருளாதாரத்தையும் சேர்த்து பாதிக்கும் அபாய நிலை இருக்கிறது.

அதனைப் புரிந்து கொண்டு தமிழ்நாட்டு மக்கள் இது ஏதோ விவசாயிகளுடைய பிரச்சனை என்று ஒதுங்கி நிற்காமல் அனைவரும் ஒன்று திரண்டு போராடி அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.

கர்நாடகா வனவிலங்கு வாரியம் மேகதாதுவில் அணை கட்டுவதற்கான அனுமதியை வழங்கி இருக்கிறது. இது எவ்வளவு பெரிய அநியாயம். அங்குள்ள காடுகளில் வாழும் வனவிலங்குகளை பாதுகாப்பது தான் அந்த வாரியத்தின் வேலை. ஆனால் அவர்களே அதற்கு எதிராக செயல்படுகின்றனர்.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக் கட்டித் தீர வேண்டும் என அனைத்து பணிகளையும் துரிதமாக செய்து கொண்டு இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் அந்த கட்சியில் இருந்து அவர் வருவாரா இந்த கட்சியில் இருந்து இவர் சென்று அந்த கட்சியில் சேர்வாரா என்று பேசிக் கொண்டிருக்கிறோம்.

அத்திக்கடவு அவினாசி திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக நான் மூன்று முறை போராட்டம் நடத்தி இருக்கிறேன். ஐயா டாக்டர் ராமதாஸ் மூன்று முறை போராட்டம் நடத்தி இருக்கிறார். இந்த நொய்யல் ஆற்றை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக நான் பல போராட்டங்களை நடத்தி இருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.