தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகமெங்கும் சுமார் 11,773 பகுதி நேர ஆசிரியர்கள், பணி நிரந்தரம் செய்யப்படாத நிலையில், பல வருட காலமாக சொல்ல முடியாத துயரத்தில் இருக்கிறார்கள். அவர்களது எதிர்காலம் ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. போதிய ஊதியம் வழங்கப்படாததால் விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு, கல்விகட்டண உயர்வு போன்றவற்றால் இவர்களது குடும்பம் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகியிருக்கின்றன. இவர்களில் பலர் கடந்த 15 ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியர்களாக பணி செய்து வருகின்றனர் என்பது கவலை அளிக்கிறது.
பணி நிரந்தரம், பல ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியர்களாக பணியாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு நிரந்தர அரசு பணியாளர் அந்தஸ்து, ஊதிய உயர்வு, நீண்ட காலமாக பணியாற்றியவர்களுக்கு உரிய சலுகைகள் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர்ந்து பகுதிநேர ஆசிரியர்கள் போராடி வருகிறார்கள். நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு போன்ற வாழ்க்கையை அனுபவித்து வரும் அவர்களது வாழ்வதாதரம் உயர்வதற்கு முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள், ஆவன செய்ய வேண்டும்.
2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தவெசு வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “ஆசிரியர், செவிலியர் உட்பட அரசு பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட தற்காலிக பணியாளர்கள் 5 வருட பணி அனுபவம் பெற்றதும், அவர்கள் நிரந்தரப் பணியாளர்களாக நியமனம் செய்யப்படுவார்கள்” என வாக்குறுதி கொடுக்கப்பட்டது.
தற்போதைய நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக எவ்வித சிறப்பு சலுகைகளோ, ஊதிய உயர்வோ ஏதுமில்லாமல், பகுதி நேர ஆசிரியர்களாக பலர் பணிபுரிகிறார்கள். இதை தவெக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
கடந்த திமுக ஆட்சி காலத்தில் பகுதிநேர ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டன. இந்நிலையில் தவெக தேர்தல் அறிக்கையிலுள்ள வாக்குறுதிகள் மக்களுக்கு மிகவும் அவசரமானதும், அவசியமானதும் ஆகும். என்று கூறிக்கொண்டிருக்கும் தவெக அரசு, 5ஆண்டு காலம் பணி முடிந்தும் பகுதிநேர ஆசிரியர்களாக தொடர்ந்து பணிபுரிவோர்க்கு “சமவேலை சமஊதியம்”என்ற அடிப்படையில் பணி நிரந்தரமும்,15ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரிவோர்க்கு குடும்ப நிவாரண நிதியும் வழங்கி அவர்கள் விடும் வேதனைக் கண்ணீரைத் துடைக்க வேண்டுமென, கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




