உதயநிதி வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை முடிவில் 93,285 வாக்குகளப் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமகவின் கசாஸி 23,930 வாக்கு பெற்று தோல்வியைத் தழுவினார்.
இந்த நிலையில் உதயநிதி வெற்றியை எதிர்த்து, தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான வழக்கறிஞர் எம்.எல்.ரவி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். அதில், உதயநிதி தனது வேட்புமனுவில் தவறான தகவல்களை அளித்துள்ளதாகவும், ஆகவே அவரது வேட்புமனுவை ஏற்றுக்கொண்டது செல்லாது என அறிவிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
இவ்வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வைப்புத்தொகையை செலுத்தவில்லை என்றால் தேர்தல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, வெற்றி பெற்றது செல்லும் என முடிவெடுக்கு நேரிடும் என மனுதாரருக்கு நீதிபதி எச்சரித்தார். மேலும், இதுதொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை படித்துவிட்டு தெரிவிக்கவும் மனுதாரருக்கு உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.







