‘பொன்னியின் செல்வன்’ கதையில் ஆதித்த கரிகால சோழனை கொன்றது யார்? என்பதன் வரலாறை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டிய நிலையில், அதன் ரகசியத்தை உடைக்கும் விதமாக இன்று வெளிவந்துள்ள PS2 படம் எப்படி இருக்கிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்…
மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் இன்று திரையரங்கில் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் செய்த நிலையில் இரண்டாம் பாகம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது.
முதல் பாகத்தின் தொடர்ச்சியாக பல்வேறு புதிர்களுக்கு இரண்டாம் பாகம் விடை கொடுத்துள்ளது.
இலங்கையில் இருந்து திரும்பிய அருண்மொழி வர்மன் கடலில் விழுகிறார். கடலில் விழுந்த அருண்மொழி வர்மன் ஊமை ராணியால் காப்பாற்றப்படுகிறார். அதே நேரத்தில் சோழ சாம்ராஜ்யத்தை கைப்பற்ற மதுராந்தகன் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்.
இது ஒருபுறம் இருக்க சோழ குலத்தை அழிக்கவும் ஆதித்த கரிகாலனை கொலை செய்யவும் பாண்டியர்களுடன் இணைந்து நந்தினி மிகப்பெரிய சதியை தீட்டி வருகிறார். இந்த சதி திட்டம் அருண்மொழி வர்மனுக்கும், குந்தவைக்கும் தெரியவர இருவரும் ஆதித்த கரிகாலனை எச்சரிக்கின்றனர்.
நந்தினியின் சூழ்ச்சியை அறிந்த பிறகும் அவரை தேடி கடம்பூர் செல்கிறார் ஆதித்த கரிகாலன். கடம்பூர் சென்ற ஆதித்த கரிகாலனுக்கு என்ன ஆனது ? மதுராந்தகன் கனவு நிறைவேறியதா இல்லையா ? அருண்மொழி வர்மனை காப்பாற்றிய ஊமை ராணி யார் ? பாண்டியர்களின் சபதம் நிறைவேறியதா ? இப்படி பல்வேறு கேள்விகளுக்கு பதில் கொடுக்கிறது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்.
முதல் பாகத்தில் ஆதித்த கரிகாலன் பெரிய அளவில் காட்டப்படவில்லை என்ற உணர்வை இரண்டாம் பாகம் பூர்த்தி செய்துள்ளது. அவரது நடிப்பு, உணர்வு, காதல், வீரம் என ஆதித்த கரிகாலனை கொண்டாடும் வகையில் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இளமை கால காதல் தொடங்கி அவரது இறுதி நொடிகள் வரை முடிந்த அளவுக்கு சிறப்பான காட்சிகளை மணி ரத்னம் கொடுத்துள்ளார்.
நந்தினி ஒரு நாகப்பாம்பு என்பார்கள் அதற்கு ஏற்றார் போல அவரது ஒவ்வொரு காட்சிகளும் மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அழகிலும், சூழ்ச்சி செய்யும் விதத்திலும் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் ஐஷ்வர்யா ராய். காட்சிக்கு
காட்சி மெருகேறிக் கொண்டே செல்லும் அளவிற்கு அவரது நடிப்பும் முக பாவனைகளும் சிறப்பாக அமைந்துள்ளது.
படத்தின் முக்கிய கதாப்பாத்திரமான அருண்மொழி வர்மன். அந்த கதாப்பாத்திரத்தில் வலு சேர்க்கும் வகையில் ஜெயம்ரவி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ராஜா ராஜா சோழனுக்கு உரித்தான கருணையும், விட்டு கொடுக்கும் மனம் கொண்டவராகவும் இயல்பான நடிப்பை ஜெயம்ரவி வெளிப்படுத்தி உள்ளார். பொன்னியின் செல்வன் என்ற தலைப்பு ஏற்ப அவரது நடிப்பும் சிறப்பாக இருந்தது. ஆனால் முதல் பாகத்தை போல இரண்டாம் பாகத்திலும் பெரிய அளவில் அவரை காட்சிப்படுத்தாமல் போனது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்.
குந்தவையாக முதல் பாகத்தில் நம்மை பிரமிக்க வைத்த த்ரிஷா இரண்டாம் பாகத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். நந்தினியா குந்தவையா என்று சொல்லும் அளவிற்கு த்ரிஷாவும், ஐஷ்வர்யா ராயும் மாறி மாறி நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
வந்திய தேவன் கார்த்தி முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்தில் மிக சிறப்பாக நடித்துள்ளார். த்ரிஷா உடனான காதல் காட்சியாகட்டும், அருண்மொழி வரமனுக்காக போராடுவதாகட்டும், ஆதித்த கரிகாலனுக்காக அடி வாங்குவது என காட்சிக்கு காட்சி நம்மை ரசிக்கும் அளவுக்கு அவரது நடிப்பு உள்ளது.
அதே போல சரத்குமார், பார்த்திபன், பிரபு, ஜெயராம் என படத்தில் நடித்த அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் சிறப்பாக நடித்துள்ளனர். ஏ ஆர் ரஹ்மான் பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்கு வலு சேர்க்கிறது.
ஒரு நாவலை திரைப்படமாக்குவது சாதாரண காரியம் அல்ல. அதிலும் பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று நாவலை திரைப்படமாக உருவாக்க மிகப்பெரிய மெனக்கெடல் தேவை. அதை இயக்குனர் மணி ரத்னம் சரியாக கையாண்டுள்ளார் என்பது இந்த படத்தின் மூலம் தெரிகிறது. காட்சிகளிலும், திரைக்கதையிலும் முதல் பாகத்தை போல இரண்டாம் பாகத்திலும் நிறைய உழைத்துள்ளார்.










