வெள்ளப்பெருக்கால் கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை!

பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடைவிதித்து தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட் ராஜன் அறிவித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு…

பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடைவிதித்து தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட் ராஜன் அறிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், இயற்கையின் சூழலில் பெரிய குளத்தில் இருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. இந்த அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலை கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் பெய்கிற மழை நீர் சிறு சிறு ஓடைகள் வழியாக வழிந்தோடி கும்பக்கரை அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

இந்த அருவிக்கு வருடத்தின் பெரும்பாலான நாட்களில் நீர் வரத்து இருப்பதால் தேனி
மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும்
வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றன.

இந்நிலையில் கடந்த ஒரு சில நாட்களாக வெயிலின் தாக்கத்தால் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து குளித்து மகிழ்ந்து சென்றனர். இந்நிலையில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலை கொடைக்கானல் வட்ட கானல் பகுதியில்
பெய்த கனமழையால் இன்று அதிகாலை முதலே அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தற்போது சுற்றுலா பயணிகளுக்கு தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட் ராஜன்
தடைவிதித்து அறிவித்துள்ளார். இதனால் அருவியில் குளிப்பதற்கும் அருவியின்
அருகில் சுற்றுலா பயணிகள் சென்று பார்ப்பதற்கும் அனுமதி நிறுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் நீர் வரத்து சீரானதும் சுற்றுலாப் பயணிகளுக்கு கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு அனுமதி அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

—-ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.