கர்நாடக தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முக்கிய தலைவர்களின் முன்னிலை நிலவரம் குறித்து பார்க்கலாம்…
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மூன்று பெரும் கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவிய நிலையில், மொத்தமாக 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.
கடந்த 10-ம் தேதி நடைபெற்ற தேர்தலில், 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 36 வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இதுவரை காங்கிரஸ் கட்சியே பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் முக்கிய தலைவர்களின் முன்னிலை, பின்னடைவு நிலவரம் பின்வருமாறு :
ஷிக்கான் தொகுதியில் போட்டியிட்ட கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை முன்னிலை வகித்து வருகிறார்.
கனகபுரா தொகுதியில் போட்டியிட்ட கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் முன்னிலையில் உள்ளார்.
காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் தினேஷ் குண்டுராவ் முன்னிலை வகிக்கிறார்.
வருணா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா முன்னிலையில் உள்ளார்.
ஷிகாரிபூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பி.ஒய்.விஜயேந்திரா முன்னிலையில் உள்ளார்.
ஹூப்ளி தார்வாட் (மத்தி) தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் ஜெகதீஷ் ஷெட்டர் முன்னிலையில் உள்ளார்.
ராம்நகரா தொகுதியில் போட்டியிட்ட மஜத வேட்பாளர் நிகில் குமாரசாமி பின்னடைவை சந்தித்து வருகிறார்.
சிதாபூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்க் கார்கே முன்னிலையில் உள்ளார்.
சிக்மகளூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் சி.டி.ரவி பின்னடைவைச் சந்தித்து வருகிறார்.
விஜயநகர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ணப்பா முன்னிலையில் உள்ளார்.
தொடர்ந்து காங்கிரஸ் கட்சியே பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சில தொகுதிகளில் ஏற்ற இறக்கத்துடன் முன்னிலை நிலவரம் இருந்து வருகிறது.







