“கண்ணுக்கு தெரியாத காற்றை வைத்து ஊழல் செய்தவர்கள் திமுகவினர்” – முதல்வர் விமர்சனம்

ஊழலுக்காக கலைக்கபட்ட ஒரே ஆட்சி, திமுக ஆட்சிதான் என்றும், கண்ணுக்கு தெரியாத காற்றை வைத்தும் ஊழல் செய்தவர்கள் திமுகவினர் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற…

ஊழலுக்காக கலைக்கபட்ட ஒரே ஆட்சி, திமுக ஆட்சிதான் என்றும், கண்ணுக்கு தெரியாத காற்றை வைத்தும் ஊழல் செய்தவர்கள் திமுகவினர் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே இருப்பதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சி தலைவர்களும் தற்போது தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, திருச்சி மரக்கடை அருகே நடைபெற்ற தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், நீட் தேர்வுக்கு பிள்ளையார் சுழி போட்டது காங்கிரஸ் – திமுக கூட்டணி அரசுதான் என்றும், நீட் தேர்வை கடுமையாக எதிர்த்தவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா என்றும் குறிப்பிட்டார். புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகளை அதிமுக அரசு கொண்டு வந்ததை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டு பேசினார். கோதாவரி – காவிரி நதிகளை இணைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் வற்றாத ஜீவ நதியாக காவிரி மாறும் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.