சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 5.8 கிமீ உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 5.8 கிமீ முதல் 7.6 கிமீ உயரம் வரை தென் தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. வட தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று (06.08.2026) கோயம்புத்தூர், தேனி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, கரூர், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




