ஐபிஎல் 2027: ஹர்திக் பாண்டியா பஞ்சாப் அணிக்கு சென்றார்; மும்பைக்கு அர்ஷ்தீப்!

பஞ்சாப் அணி மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை ரூ.18 கோடிக்கு டிரேட் செதுள்ளது.

ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே ஹர்திக் பாண்டியா – அர்ஷ்தீப் சிங் டிரேடிங் நிறைவடைந்துள்ளது.

இதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாறியுள்ளார். அதேபோல், பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறியுள்ளார்.

ஹர்திக் பாண்டியா இதுவரை ரூ.16.35 கோடி ஊதியம் பெற்று வந்த நிலையில், தற்போது ரூ.18 கோடி ஊதியத்தில் பஞ்சாப் அணியில் இணைந்துள்ளார். அதேபோல், அர்ஷ்தீப் சிங் தனது தற்போதைய ரூ.18 கோடி ஊதியத்திலேயே மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட உள்ளார். இதனை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த வீரர்கள் பரிமாற்றம் தொடர்பாக இரு அணிகளும் ஐபிஎல் நிர்வாகத்திடம் தங்களது விருப்பத்தைத் தெரிவித்திருந்ததாகவும், இந்த நடைமுறைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை அணியில் புதிய நிர்வாகக் குழு:

ஹர்திக் பாண்டியா பஞ்சாப் அணிக்கு மாறியுள்ள நிலையில், அடுத்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இதற்கிடையே, மும்பை அணியின் பயிற்சியாளர் குழுவிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தலைமைப் பயிற்சியாளராக இருந்த மஹேலா ஜெயவர்தனேவுக்குப் பதிலாக கீரன் பொல்லார்டு நியமிக்கப்பட்டுள்ளார். ராபின் உத்தப்பா பேட்டிங் பயிற்சியாளராகவும், மிட்செல் மெக்லெனகன் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும், டி. திலீப் ஃபீல்டிங் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளின் புதிய கூட்டணி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.