இளைஞர் ஒலிம்பிக் 2026: குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு இரட்டை தங்கம்!

டக்கார் 2026 இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் குஞ்சன் 48 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். இதன் மூலம், இந்திய குத்துச்சண்டை வீரர், வீராங்கனை இருவரும் தங்கம் வென்று இந்தியாவுக்கு இரட்டை தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளனர்.

செனகலின் டக்கார் நகரில் நடைபெற்று வரும் 2026 இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர். குறிப்பாக, குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. பெண்கள் பிரிவில் குஞ்சனும், ஆண்கள் பிரிவில் லைரென்லக்பம் அம்பேகர் மீத்தேயும் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

வரலாறு படைத்த குஞ்சன்!

பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை இறுதிப்போட்டியில் இந்தியாவின் குஞ்சன், அல்ஜீரியாவின் பென்சலா பௌதாய்னாவை எதிர்கொண்டார். இதில் சிறப்பாகச் செயல்பட்ட குஞ்சன் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இதன் மூலம் இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டையில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை குஞ்சன் படைத்துள்ளார்.

ஆண்கள் பிரிவிலும் தங்கம்!

இதற்கு முன்னதாக நடைபெற்ற ஆண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் லைரென்லக்பம் அம்பேகர் மீத்தேய், அயர்லாந்தின் ஜுபானி கிறிஸ்டியனை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்ற அம்பேகர் மீத்தேய் தங்கப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் இளைஞர் ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற இரு குத்துச்சண்டை வீரர்களும் தங்கம் வென்றுள்ளதால், இந்திய அணி 100 சதவீத வெற்றியைப் பதிவு செய்துள்ளதாக இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

குஞ்சனின் தங்கப் பதக்க வெற்றியைத் தொடர்ந்து, டாக்கர் 2026 இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். இதற்கு முன்பு 2018ஆம் ஆண்டு அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்ற இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 3 தங்கம், 9 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களை வென்றதே இந்தியாவின் சிறந்த செயல்பாடாக இருந்தது.

மற்ற போட்டிகளிலும் இந்திய வீரர்கள் சாதனை!

தடகளப் போட்டியில் பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஷௌர்யா அம்புரே 13.59 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் தடகளத்தில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

மல்யுத்தப் போட்டியில் பெண்களுக்கான 75 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் தனியா வெள்ளிப் பதக்கம் வென்றார். இறுதிப்போட்டியில் சீனாவின் மின் ஜாவோவிடம் 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார். இதன் மூலம் இளைஞர் ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார்.

ஜூடோவில் பெண்களுக்கான 63 கிலோ எடைப்பிரிவில் குஷ்பு ராஜக்பாய் தர்ஜடாவும், பேட்மிண்டனில் தன்வி பத்ரியும் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.

நீச்சல் போட்டியில் இந்தியாவுக்கு மூன்று பதக்கங்கள் கிடைத்துள்ளன. பெண்களுக்கான 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் போட்டிகளில் தினிதி தேசிங்கு வெண்கலப் பதக்கங்களை வென்றார். இதன் மூலம் ஒரே இளைஞர் ஒலிம்பிக் தொடரில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

ஆண்களுக்கான 200 மீட்டர் பட்டர்ஃபிளை நீச்சல் போட்டியில் தீர்த்தங்க் பெகு வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய ஆண் நீச்சல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

வுஷு போட்டியில் பெண்களுக்கான சாங்சுவான் பிரிவில் ராஜ்குமாரி லான்சென்பி சானு வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

இவ்வாறு டக்கார் இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளிலும் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். குத்துச்சண்டையில் கிடைத்துள்ள இரண்டு தங்கப் பதக்கங்கள் இந்தியாவின் பதக்க வேட்டைக்கு மேலும் வலுசேர்த்துள்ளன. மேலும், 2018ஆம் ஆண்டின் 13 பதக்கங்கள் என்ற சாதனையை முறியடிக்கும் இலக்குடன் இந்திய இளம் வீரர்கள் தொடர்ந்து போட்டியிட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.