துருக்கியின் அண்டல்யா நகரில் நடைபெற்று வரும் COP31 காலநிலை மாநாட்டில், ஐக்கிய நாடுகள் சபை நேற்று (நவம்பர் 12) வியாழக்கிழமை இந்தப் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. பேரிடர்கள் ஏற்பட்டு பாதிப்புகள் உருவான பிறகு நிதியைத் திரட்டுவதற்குப் பதிலாக, பேரிடர்களை முன்கூட்டியே கணித்து அதற்கான நிதியைத் தயாராக வைத்திருப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
6 ஐ.நா. அமைப்புகள் ஒன்றிணைந்து புதிய முயற்சி!
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பேரிடர் இடர் நிதியுதவித் தளத்தின் (UN Disaster Risk Financing Platform) மூலம் 2030ஆம் ஆண்டுக்குள் 7.5 கோடி மக்களையும் அவர்களின் வாழ்வாதாரத்தையும் காலநிலை பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய மனிதாபிமான நிதியுதவியில் 2 சதவீதத்திற்கும் குறைவான நிதியே தற்போது பேரிடர்களுக்கு முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்படுகிறது. இதனால், பேரிடர்கள் ஏற்பட்ட பிறகே நிதியைத் திரட்ட வேண்டிய நிலை உள்ளது.
இந்த நிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி, புயல் உள்ளிட்ட தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்படுவதற்கு முன்பே அரசுகளும் மனிதாபிமான அமைப்புகளும் நடவடிக்கை எடுக்க இந்தத் தளம் உதவும். இதில் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO), சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM), ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA), யுனிசெப் (UNICEF), ஐ.நா. அகதிகள் முகமை (UNHCR), உலக உணவுத் திட்டம் (WFP) ஆகிய ஆறு ஐ.நா. அமைப்புகள் ஒன்றிணைந்துள்ளன. மேலும், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் நிதிச் சந்தைகளுடன் இணைந்து செயல்பட்டு, முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட நிதியுதவியை அதிகரிக்கவும், இதற்கான செலவுகளைக் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தொடங்கியுள்ள நிதிப் பாதுகாப்பு நடவடிக்கைகள்!
இந்தத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே சில ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. OCHA மற்றும் UNICEF ஆகிய அமைப்புகள் தங்களது முன்கூட்டிய நடவடிக்கைத் திட்டங்களுக்கு நிதிப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் காப்பீட்டுக் கொள்கைகளைச் செயல்படுத்தியுள்ளன. இதற்கு WFP-யின் சிறப்பு காப்பீட்டுக் குழுக்கள் உதவி செய்துள்ளன. அதேபோல், பேரிடர்களால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படுவதற்கு முன்பே அவர்களைப் பாதுகாக்கும் வகையில், இடம்பெயர்வு அபாயங்களைக் கண்டறியும் நிபுணத்துவத்தை IOM வழங்க உள்ளது.
இதுகுறித்து OCHA அமைப்பின் நிதி மற்றும் தொடர்புப் பிரிவு இயக்குநர் லிசா டௌட்டன் கூறுகையில், பேரிடர்களை முன்கூட்டியே கணிக்க முடிந்தாலும், அவற்றை எதிர்கொள்வதற்கான நிதி ஏற்பாடுகள் இன்னும் தாமதமாகவும் ஒருங்கிணைப்பின்றியும் இருப்பதாகத் தெரிவித்தார். பேரிடர்கள் தீவிரமடைவதற்கு முன்பே, பெரிய அளவில் முன்கூட்டியே நிதியைப் பயன்படுத்துவது பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாக்கவும், மனிதாபிமான பாதிப்புகளைக் குறைக்கவும் அவசியம் என்றும் அவர் கூறினார்.
மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் குறைக்க ஐ.நா. வலியுறுத்தல்!
இதற்கிடையே, COP31 மாநாட்டில் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றது. குறிப்பாக, குறுகிய காலத்தில் புவி வெப்பமயமாதலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. நேற்று (நவம்பர் 12) வியாழக்கிழமை நடைபெற்ற கார்பன் அல்லாத பசுமைக்குடில் வாயுக்கள் தொடர்பான தலைவர்கள் மாநாட்டில் பேசிய ஐ.நா. காலநிலைத் தலைவர் சைமன் ஸ்டீல், புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதற்கான விரைவான மற்றும் குறைந்த செலவிலான வழிகளில் மீத்தேன் வெளியேற்றத்தைக் குறைப்பதும் ஒன்று என்றார்.
மேலும், மீத்தேன் வெளியேற்றத்தைக் குறைப்பதன் மூலம் பொருளாதாரம், விவசாய விளைச்சல் மற்றும் சுகாதாரத்தையும் மேம்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்தார். எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியின்போது இயற்கை எரிவாயுவை எரித்து வீணாக்குவதால் ஏற்படும் பொருளாதார இழப்புகளையும் அவர் சுட்டிக்காட்டினார். ஆண்டுதோறும் சுமார் 167 பில்லியன் கன மீட்டர் எரிவாயு இவ்வாறு எரிக்கப்படுவதாகவும், இதனால் சுமார் 54 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி வீணாவதாகவும் தெரிவித்தார்.
மேலும், 2023ஆம் ஆண்டில் உமிழ்வைக் குறைப்பதற்காக ஒதுக்கப்பட்ட காலநிலை நிதியில் வெறும் 0.5 சதவீதம் மட்டுமே அதிக மாசுபாட்டை ஏற்படுத்தும் வாயுக்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். உலகளாவிய மீத்தேன் வெளியேற்றத்தில் சுமார் முக்கால்வாசி பங்களிப்பைக் கொண்டுள்ள நாடுகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமான நாடுகள், தங்களது சமீபத்திய தேசிய காலநிலைத் திட்டங்களில் மீத்தேன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளைச் சேர்த்துள்ளன. “இப்போது அந்தத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று குறிப்பிட்ட சைமன் ஸ்டீல், மீத்தேன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு முன்னுரிமை அளிக்கவும், முக்கியத் துறைகளில் கொள்கைகளை வலுப்படுத்தவும், அரசு மற்றும் தனியார் நிதியைத் திரட்டவும் நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.
5 ஆண்டுகளுக்குப் பிறகு COP மாநாட்டில் கிரேட்டா தன்பெர்க்!
இதற்கிடையே, காலநிலை மாற்றத்திற்கு எதிரான இளம் சூழலியல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க், 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் COP மாநாட்டில் பங்கேற்றார். நேற்று (நவம்பர் 12) வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பேசிய அவர், காலநிலை நெருக்கடியை எதிர்கொள்வதில் அரசுகளும் சர்வதேச அமைப்புகளும் போதுமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டதாகக் கடுமையாக விமர்சித்தார். “இந்தக் கிரகம் தானாக அழிந்து கொண்டிருக்கவில்லை. அது அழிக்கப்படுகிறது” என்று தெரிவித்த அவர், உலகம் மேலும் பல இனப்படுகொலைகளையும் சுற்றுச்சூழல் அழிவுகளையும் எதிர்கொள்ளும் அபாயம் இருப்பதாக எச்சரித்தார். மேலும், எதிர்காலத்தில் அடிப்படைத் தேவைகள்கூட ஆடம்பரப் பொருட்களாக மாறக்கூடிய நிலை உருவாகலாம் என்றும் கூறினார். “நம்மைக் காப்பாற்ற யாரும் வரப்போவதில்லை” என்று குறிப்பிட்ட அவர், குறிப்பாக அதிக வாய்ப்புகளையும் சலுகைகளையும் பெற்றுள்ள மக்கள் மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.




