கொரோனா 2 ஆம் தவணை நிவாரணத் தொகை, ஜூன் 3 ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் இன்று ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது: கொரோனா தடுப்பு பணிகளுக்காக 14 மாவட்டங்களுக்கு அமைச்சர்களை அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2.7 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக தலா 2 ஆயிரம் கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ பணியாளர்களுக்கு நிவாரணம் மற்றும் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுதொழில் நிறுவனங்களுக்கு கடன் சலுகை வழங்க ரிசர்வ் வங்கிக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. மருந்துகளை கள்ள சந்தையில் விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். தடுப்பூசி இறக்குமதிக்கு உலகளாவிய டெண்டர் விடப்பட்டுள்ளது. ரூ 50 கோடி செலவில் தமிழகத்திலேயே ஆக்சிஜன் மருந்து உற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக, மருத்துவக் குழவுடன் நாளை ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது. ஜூன் 3 ஆம் தேதிக்குள் இரண்டாம் தவணை கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்.
இவ்வாறு கூறினார். அவரிடம், டெல்லியில் பிரதமரை சந்திக்க இருக்கிறீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நிலைமை சரியானதும் டெல்லியில் பிரதமரை சந்தித்து தமிழகத்தின் உரிமைகளை கேட்டு பெறுவோம் என்றும், ஆட்சிக்கு வந்த மகிழ்ச்சியை விட கொரோனாவை கட்டுப்படுத்தினால்தான் மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.







