முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள் தமிழகம் செய்திகள் Health

தாக்கப்படும் மருத்துவர்கள் காக்கப்படுவார்களா?


ஜெயகார்த்தி

உயிர்காக்கும் மருத்துவர்களை கடவுளுக்கு நிகராக பார்ப்பவர்கள் இந்தியர்கள். கொரோனா காலத்தில் காலநேரம் இன்றி மருத்துவப் பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட மருத்துவப் பணியாளர்களை போற்றும் வகையில் அரசே விமானம் மூலம் பூமழை தூவி வாழ்த்தியது. அப்படி மக்களாலும், அரசாங்கத்தாலும் போற்றப்படும் மருத்துவர்கள் தங்களுக்கு ஒரு ஆபத்து என்றால் காக்கப்படுவது இல்லை என்று கதறுகிறார்கள். ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகளை காப்பாற்றிக் கொடுக்கும் போது, தெய்வத்திற்கு நிகராக மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களை போற்றும் உறவினர்கள், உயிரிழப்பு நேரிட்டாலோ ஆத்திரத்தில் ஆக்ரோஷமாக மாறிவிடுகிறார்கள். மருத்துவர்கள், செவிலியர்கள் மீது தாக்குதல், மருத்துவமனை சூறை என்று நீள்கிறது. இதைத் தடுப்பது எப்படி? மருத்துவர்களுக்கான பாதுகாப்பு என்ன? என்பது பற்றி இனி பார்ப்போம்…

ஏன் இந்த சிக்கல்?

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மருத்துவர்கள் – நோயாளிகளின் உறவினர்களுக்கு இடையிலான மோதலுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது மருத்துவர்கள் பற்றாக்குறையும், போதுமான மருத்துவ வசதிகள் இன்மையும் தான். சுகாதாரத்துறை அமைச்சக புள்ளி விவரப்படி, இந்தியாவில் 13 லட்சத்திற்கு மேற்பட்ட அலோபதி மருத்துவர்களும், சுமார் ஐந்தரை லட்சம் ஆயுஷ் மருத்துவர்களும் உள்ளனர். அந்த வகையில் பார்த்தால் 834 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார். இது ஆயிரம் நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் என்ற உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைக்கு அதிகமாகவே இந்தியாவில் மருத்துவர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களில் பெரும்பான்மையானோர் நகர்ப்புறங்களிலேயே கவனம் செலுத்துவதால் கிராமப்புறங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதைக் குறைக்க முடியவில்லை.

அதேபோல் கொரோனா காலத்தில் உயிரைக் கையால் பிடித்துக்கொண்டு மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தாக்கப்படுவதையும் பார்த்தோம். அதைத் தொடர்ந்து தொற்று நோய்கள் திருத்தச் சட்டம், 2020ன் படி வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியது.

சட்டம் சொல்வது என்ன?

தொற்று நோய்கள் திருத்தச் சட்டம், 2020ன் படி மருத்துவர்களோ அல்லது மருத்துவப் பணியாளர்களோ தாக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனையுடன் 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம். மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மீது கடுமையாக தாக்குதல் நிகழ்த்தப்பட்டால், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையுடன் 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம். அத்துடன் எந்த வாரண்ட்டும் இன்றி போலீஸ் அதிகாரிகள் கைது செய்யவும், ஜாமீனில் வெளியே வர இயலாத வகையில் வழக்கு பதியவும் வகை செய்கிறது.

யாருக்கு அதிகம் பாதிப்பு?

நலம் பேணும் மருத்துவர்களே, அதிக ஆபத்தை எதிர்கொள்வதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. அதிலும் குறிப்பாக

அ) இளம் மருத்துவர்கள்

( ஆ) பெண் மருத்துவர்கள்

இ) மகப்பேறு மருத்துவர்கள்

ஆகியோர் தான் அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர். பணம் கொழிக்கும் தொழிலாக மருத்துவம் முன்னிறுத்தப்படுவதும் வன்முறைகளுக்கு காரணமாகிவிடுகிறது. மருத்துவமனைகளில் நேரிடும் உயிரிழப்புகள் அனைத்திற்கும் தங்களையே குற்றம்சாட்டுவது ஏற்க முடியாது என்றும் மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

குணப்படுத்திக்கொள்வார்களா மருத்துவர்கள்?

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஜூலை மாதம், ஐ.சி.யூவில் திடீரென புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த மருத்துவர்களைத் தாக்கத் தொடங்கினர். அதுமட்டுமின்றி கண்ணில் பட்ட விலையுயர்ந்த மருத்துவ உபகரணங்களையும் அடித்து நொறுக்கினர். இது மட்டும் அல்ல இதுபோல் நாடு முழுவதும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. இதனைக் கண்டித்தும், தங்களுக்கு உயிர் பாதுகாப்பு வழங்கக் கோரியும் மருத்துவர்களால் அவ்வப்போது போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. 

எப்படி பிரச்னைக்கு தீர்வு காணலாம்?

மருத்துவமனைகளில் பிரச்னைகள் / மோதல் தோன்றினால் அதனை உடனே களைவது பற்றி சம்பந்தப்பட்டவர்கள் ஆராய வேண்டியது அவசியம். பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் இதில் கவனமுடன் இருக்க வேண்டும். மருத்துவப் பணியில் ஈடுபடாத மூத்த ஊழியர்கள் பிரச்னைக்கு தீர்வுகாண முயற்சிக்கலாம். ஏன் பிரச்னை நேரிட்டது என்பது பற்றி, சூழல் கட்டுக்குள் வந்த பிறகு மருத்துவமனை நிர்வாகம் விளக்கலாம். அத்துடன்

இதுபோன்ற சூழல் வந்தால் எப்படி கையாள்வது? என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக மாதம் ஒருமுறை மருத்துவமனை நிர்வாகத்தினர் கலந்தாலோசனை

செய்வதும் அவசியம் என்று மருத்துவ துறைசார் வல்லுநர்கள் சொல்கிறார்கள்.

மருத்துவர்களுக்கு கடுமையான வேலைபளு

தமிழ்நாட்டில் கடுமையான வேலைபளுவுடன் பணியாற்றும் மருத்துவர்களின் பணி நேரம் அதிகரிப்பு மேலும் அழுத்தத்தைக் கொடுத்துள்ளது. இதனைக் குறைக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் மீதான தொடர் பணி சார் அழுத்தங்களை கைவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

முன்னோடி மாநிலம் தமிழ்நாடு

தமிழ்நாடு மருத்துவ நலம் பேணுவோர் மற்றும் மருத்துவ நலம் பேணும் நிறுவனங்களைப் பாதுகாக்கும் சட்டம் 2008ல் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டது. அப்போதே, மருத்துவர்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டிவிடுதல், ஊக்குவித்தல் போன்ற செயல்களைப் புரிந்தால் 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கத் தக்க சிறைதண்டனையும் அபராதமும் விதிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் உயிர்காக்கும் பணியில் ஈடுபடும் மருத்துவர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டியது மாநில அரசுகளின் பொறுப்பு என்றும் மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர். அதே போல் மருத்துவர்களும், மருத்துவமனைகளும் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டியதும் அவசியம்.

  • ஜெயகார்த்தி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திமுக பொதுக்குழு அறிவிப்பு – மு.க.ஸ்டாலின் 7-ம் தேதி வேட்புமனு தாக்கல்

EZHILARASAN D

பாஜக புகார்: காமெடியன் பரூக்கியின் நிகழ்ச்சி மீண்டும் ரத்து

Halley Karthik

பிறந்த நாளுக்கு கிடைத்த சிறந்த பரிசு – சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட புகைப்படம்

EZHILARASAN D