தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதிக்கு வருகை தந்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, இடைகால் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு கொரானா தடுப்பு ஊசி முகாமை பார்வையிட்ட அமைச்சர், இதுவரை எத்தனை நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டார்.
தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் இன்று ஒரு லட்சம் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. இதுவரை 12 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி 94.22 சதவீதம் பேருக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி 84.86 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், 15 முதல் 17 வயது உட்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி 94.43 சதவீதம் பேருக்கும், இரண்டாம் தவணை தற்போது 84.86 சதவீதம் பேருக்கும் போடப்பட்டுள்ளது.
இதுவரை இந்தியாவிலே தமிழகத்தில் தான் 31 முறை சிறப்பு தடுப்பூசி ஒரு நாள் முகாம்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் இதுவரை 4 கோடியே 44 லட்சத்து 38 ஆயிரத்து 359 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
பணி நேரத்தில் மருத்துவமனையில் இல்லாத மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் தென்காசி மாவட்டம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி இல்லை. அந்த ஆறு மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரி கொண்டுவர தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
மத்திய அரசு அனுமதி அளித்து, அதற்குத் தேவையான மத்திய அரசு ஒதுக்கும் 60% நிதியை கொடுத்தவுடன் 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி தொடங்க விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.








