வழக்கறிஞரும் காங்கிரஸ் முக்கியப் பிரமுகருமான ஜெய்வீர் ஷெர்கில், தேசிய செய்தித் தொடர்பாளர் பதவியை திடீரென ராஜிநாமா செய்தார்.
காங்கிரஸின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கட்சியில் முடிவெடுப்பது இனி பொதுமக்களின் நலன்களுக்காக அல்ல, ஆனால் சுயநலவாதிகளால் கட்சி பாதிக்கப்படுவதாக ஷெர்கில் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நான் ராஜிநாமா செய்கிறேன்.
காங்கிரஸின் தற்போதைய முடிவெடுப்பவர்களின் சித்தாந்தம் மற்றும் தொலைநோக்கு பார்வை இளைஞர்கள் மற்றும் நவீன இந்தியாவின் நலன்களுடன் ஒத்துப்போகவில்லை என்பதே நான் பதவியை ராஜிநாமா செய்வதற்கு முக்கிய காரணமாகும் என்றார் ஷெர்கில்.
ஷெர்கில் பஞ்சாப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் மற்றும் கட்சியின் இளைஞர் தலைவர்களில் ஒரு முக்கிய முகமாக இருந்தார்.
கட்சியின் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத் மற்றும் ஆனந்த் சர்மா ஆகியோர் கட்சியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட முக்கியப் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.








