திராவிட மாடல் காலாவதியான சித்தாந்தம் என ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம் செய்ததற்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்துள்ளார்.
ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, திராவிட மாடல் என்பது காலாவதியான சித்தாந்தத்தை புதுப்பிக்கும் முயற்சி என்றும், திராவிட மாடல் என்று எதுவும் இல்லை, அது வெறும் அரசியல் வாசகம் மட்டுமே என்று விமர்சனம் செய்தார். மேலும் திராவிட மாடல் சித்தாந்தம் ‘ஒரே நாடு, ஒரே பாரதம்’ கொள்கைக்கு எதிரானது என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அமைச்சர் பொன்முடியும் ஆளுநரின் கருத்துக்கு பதிலளித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்கத்தில், வரும் கல்வி ஆண்டிற்கான பொறியியல் படிப்பு கலந்தாய்விற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :
“ஆளுநராக இருப்பவர் அரசியல் பேசுவதென்பது தவறான ஒன்று. அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரா? இல்லை. அவர் மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்படுபவர். மாநில அரசு என்ன சொல்கிறதோ, அதற்கு ஒத்துப்போவது தான் ஆளுநரின் கடமையாக இருக்க வேண்டும். காலாவதி ஆனது சனாதனம் தான். இனிமேல் காலாவதியாக போவது ஆளுநர் தான். திராவிடம் அகில இந்திய அளவில் பரவத் தொடங்கி இருக்கிறது. திராவிடம் என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே பெருமையான கொள்கை”.
இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.







