சமூக வலைதளங்களுக்கான புதிய விதிமுறைகள், தனிநபர் உரிமைக்கு வேட்டு வைக்கும் செயல் எனக் கூறி மத்திய அரசு மீது வாட்ஸ் அப் வழக்குத் தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கானது மத்திய பாஜக அரசுக்கும், ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் நிறுவனங்களுக்கும் இடையிலான மோதலை மேலும் அதிகரித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில், மத்திய அரசின் புதிய விதிமுறைகளை அமல்படுத்தப் படுவதற்கு தடை கோரியுள்ளது. தவறிழைப்போர் எனக் கருதுவோரின் விவரங்களை வாட்ச் அப்பிடம் இருந்து மத்திய அரசு கோருவதை ஏற்க இயலாது என்றும், அப்படி கோருவது, இருநபர்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்ற விதிகளை மீறும் செயல் என்றும் வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.
சமூக வலைதளங்களின் முக்கிய பதவிகளில் இந்தியர்களை நியமிக்க வேண்டும், சட்டப்பூர்வ உத்தரவு கிடைத்த 36 மணி நேரத்தில் தகவல்களை நீக்க வேண்டும், புகார்களை உடனே விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிய விதிகளில் வலியுறுத்தப்படுகிறது. பேஸ்புக் பெரும்பாலான விதிகளை ஏற்றுக்கொண்டாலும், சிலவற்றை மட்டும் பேசித் தீர்க்க விரும்புகிறது. டிவிட்டரோ, அரசுக்கு எதிரான கடுமையான விமர்சனங்களை நீக்கத் தவறியதால் நெருக்கடியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா 2வது அலை தொடர்பான தவறான தகவல்களையும், மத்திய அரசு மீதான கடுமையான விமர்சனங்களையும் நீக்க வேண்டும் என்று பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் நிறுவனங்களை மத்திய அரசு கோரியது.
இதன் தொடர்ச்சியாக இந்த வாரத்தின் தொடக்கத்தில் டிவிட்டர் அலுவலகத்திற்கு போலீசார் சென்றதும் சர்ச்சையானது. இந்தியாவில் அதிக முதலீட்டைச் செய்துள்ள வாட்ஸ் அப், பேஸ்புக் நிறுவனங்கள் கடுமையான கட்டுப்பாடுகளால் தங்கள் எதிர்காலம் பாதிக்கப்படுமோ என கவலையடையத் தொடங்கியுள்ளன. வாட்ஸ் அப்பிற்கு மட்டும் இந்தியாவில் 40 கோடி பயனாளர்கள் உள்ளனர்.