முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா செய்திகள்

ஒரே ஒரு பயணிக்காக மெகா விமானத்தை இயக்கிய எமிரேட்ஸ்: ‘அந்த அனுபவம் இருக்கே..’ சிலிர்க்கும் அதிகாரி!

ஆச்சரியம்தான். கொரோனா காலகட்டத்தில் எதுவும் நடக்கும் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்! ஒரே ஒரு பயணிக்காக, ஒரு மெகா விமானத்தை, எமிரேட்ஸ் நிறுவனம் அன்போடு இயக்கி இருக்கிறது என்றால் அது ஆச்சரியம்தானே!

மும்பையை சேர்ந்தவர் பாவேஷ் ஜாவேரி (40). ஸ்டார்ஜெம் என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி. துபாயில் நிறுவனம் இருப்பதால் அடிக்கடி மும்பைக்கும் துபாய்க்கும் அசராமல் பயணிப்பவர். கடந்த 20 வருடமாக எமிரேட்ஸ் விமானத்தில் பறந்துகொண்டிருக்கும் பாவேஷ், இப்படியோரு வாய்ப்பு கிடைக்கும் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்.

வழக்கம்போல கடந்த 19 ஆம் தேதி மும்பையில் இருந்து துபாய் செல்வதற்காக, எமிரேட்ஸ் விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார் பாவேஷ். இதற்கான கட்டணம் ரூ.18 ஆயிரம். கொரோனா காரணமாக ஏகப்பட்ட கெடுபிடிகளை விதித்திருக்கிறது, எமிரேட்ஸ் நிறுவனம். இதனால் விமானப் பயணிகள் வீட்டிலேயே முடங்கிவிட்டார்கள். அவர்களுக்கும் கொரோனா பயம் இருக்கத்தானே செய்யும்.

இந்நிலையில், வழக்கம்போல சூட்கேஷூடன் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார், பாவேஷ். கூட்டம் அதிகமில்லை. எமிரேட்ஸ் கவுன்டரிலும் ஆட்கள் அதிகம் இல்லை. போர்டிங் பாஸ் வாங்கிவிட்டு கேட்டுக்கு சென்றபோது கூட, அவருக்கு அந்த ஆச்சரியம் தெரியவில்லை.

சரியான நேரத்துக்கு விமானத்துக்குள் ஏறியதும், விமானப் பணிப்பெண்கள் பாவேஷை கைதட்டி வரவேற்க, என்ன ஏதென்று தெரியாமல் பரபரப்பாகி விட்டார் பாவேஷ். 360 பேர் அமரும் அந்த பிரமாண்ட போயிங் 777 விமானத்தில், தான் ஒருவர் மட்டும்தான் பயணி என்பது அப்போதுதான் தெரிந்திருக்கிறது அந்த அதிகாரிக்கு. குளிர்ந்துவிட்டார்.

’உள்ளே சென்றதும் 18 ஏ என்ற எண் கொண்ட இருக்கையில் அமரலாமா? அது என் ராசியான இருக்கை என்றேன். அவர்கள் சிரித்துக் கொண்டே அனுமதித்தார்கள். விமானம் பறந்து கொண்டிருந்தபோது கேப்டன் அருகில் வந்து விமானத்தை சுற்றிக் காட்டட்டுமா? என்று கிண்டலாகக் கேட்டார். பிறகு, விமான அறிவிப்புகள் எனக்காவே சொல்லப்பட்டன. எப்படி என்றால், ’பாவேஷ், சீட் பெல்டை போடுங்க’, ‘பாவேஷ் விமானம் தரையிறங்க போகுது, ரெடியா இருங்க’ என்று கேப்டன் சொல்லிக்கொண்டே வந்தார். இதுபோன்ற ஓர் அனுபவத்தை பணத்தால் வாங்க முடியாது’ என்கிறார், அந்த அதிர்ஷ்டக்கார பாவேஷ்!

Advertisement:

Related posts

தமிழகத்தில் ரூ.300 கோடி பறிமுதல்: சத்யபிரதா சாகு!

எல்.ரேணுகாதேவி

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா: அச்சத்தில் மக்கள்!

Karthick

பேச மறுத்ததால் காதலியை நடுரோட்டில் கத்தியால் கொடூரமாக தாக்கிய இளைஞர்!

Jeba