விவசாய நிலங்களை அழித்து தற்போது புதிய விமான நிலையம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பிய சீமான், ஏர்போர்ட் உருவாக்கலாம் ஆனால் விளை நிலத்தை உருவாக்க முடியாது என சாடியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், புதிய விமான நிலையம் இப்பொழுது இங்கே அமைக்க வேண்டிய அவசியம் என்ன ஏன் என கேள்வி எழுப்பினார். கிட்டத்தட்ட 5000 ஏக்கரில் விமான நிலையம் அமைய உள்ளதாக கூறுகிறீர்கள். எந்த மக்கள் எங்களுக்கு புதிய விமான நிலையம் வேண்டும் என கேட்டார்கள். இந்த பகுதியில் 2500 ஏக்கர் சதுப்பு நிலங்கள் உள்ளன. 950 ஏக்கரில் நீர்நிலைகள் உள்ளன. இவைகளை அழித்துவிட்டு புதிய
விமான நிலையம் தேவையா. இதைக் கேட்டா வளர்ச்சி என்கிறார்கள் என சாடினார்.
2030 ஆம் ஆண்டுக்குள் 10 கோடி பேர் பயணிக்கும் அளவுக்கு விமான நிலையம் தேவை என்கிறார் அமைச்சர். இவ்வளவு வளர்ச்சி பற்றி சிந்திக்கும் நீங்கள் சென்னையில் மழை பெய்தால் வடிவதற்கு இடமில்லை, கழிவு நீர் கால்வாய்கள் போதவில்லை, மேலும் சென்னையில் குடிநீர் தேவை, உணவு தேவை உள்ளதை சுட்டிக்காட்டி, மக்களுக்கு மேற்கண்ட தேவைகளுக்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.
இதேபோல் ஹைதராபாத், பெங்களூருவில் புதிய விமான நிலையங்கள் அமைக்கப்பட்டன. அங்கு சுற்றி உள்ள பெரும் முதலாளிகள், வணிகர்கள் தான் பிழைத்தார்கள். அடித்தட்டு மக்களுக்கு என்ன கிடைத்தது. எனவே விமான நிலையம் வேண்டாம் என சீமான் தெரிவித்தார். மேலும் விமான நிலையத்தை உருவாக்கலாம் என்றும் ஆனால் விளை நிலத்தை உருவாக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
இவர்கள் உரிய இழப்பீடு வழங்குகிறேன் என்று ஏற்கனவே இந்த இடத்தினுடைய மதிப்பை குறைத்து விட்டார்கள். இங்கு ஏற்கனவே நிலம் வாங்கி போட்டவர்கள் தான் பிழைப்பார்கள். இந்த பகுதி மக்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது என்றும் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு எதிர்க்கட்சியாக இருந்த போது, எட்டு வழி சாலையை எதிர்த்தவர்கள், இப்போது அதையே பயண தூர குறைப்பு சாலை என்ற பெயரில் நிறைவேற்ற பார்க்கிறீர்கள். உங்கள் விருப்பத்துக்கு ஏற்றவாறு பேசுவீர்களா என குற்றம்சாட்டிய சீமான், அடுத்த கட்டமாக விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தார்..
– இரா.நம்பிராஜன்








