மகளிர் அரசியலைப் புரிந்து சமுதாயத்தினை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற
அடிப்படையில் தான் மகளிருக்கு உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவிகித இடஒதுகீட்டினை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் நான்கு முனை சந்திப்பிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் உள்ளாட்சி
தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட பட்டியலின ஊராட்சி பெண் தலைவர்களுக்கான ஊராட்சி நிர்வாகம் குறித்த கருத்தரங்கம் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன், பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், ஆட்சியர் மோகன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், ஊராட்சி மன்ற பெண் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, மகளிர் அரசியலை புரிந்து கொள்ள வேண்டும். சமுதாயத்தினை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தான் மகளிருக்கு உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்கள் வழங்கப்பட்டது. ஐம்பது சதவிகிதம் மகளிர் உள்ள நிலையில் சட்டமன்றம் பாராளுமன்ற போன்ற இடங்களில் குறைந்த அளவே மகளிர் எண்ணிக்கை உள்ளதாக தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வரும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வருங்காலத்தில் சட்டமன்ற தேர்தல், பாராளுமன்றத் தேர்தலில் அதிகளவு மகளிர் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பார். விழுப்புரம் மாவட்டத்தில் 304 ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளில் 182 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஊராட்சி மன்றத் தலைவர்கள் சிறப்பாக செயல்பட்டால் தான் மீண்டும் சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் வாக்காளிப்பார்கள் என்றார்.
-ம.பவித்ரா








