2024ம் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற கட்சிக்கு ராகுல்காந்தி மீண்டும் தலைமை ஏற்க வேண்டும் என்று ஒருபுறம் குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்க, இதற்கு முன் நடைபெற்ற 2 நாடாளுமன்ற தேர்தல்கள் 39 சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் அடைந்த தோல்விக்கு ராகுல்காந்திதான் முக்கிய காரணம் எனக் கூறி கட்சியை விட்டே வெளியேறியிருக்கிறார் குலாம் நபி ஆசாத்.
அடுத்த மாதம் ”ஒன்றிணையும் இந்தியா” என்கிற தலைப்பில் தாம் தொடங்க உள்ள நாடு தழுவிய பாத யாத்திரைக்காக ராகுல்காந்தி தயாராகிக்கொண்டிருக்கிறார், ஆனால் முதலில் காங்கிரஸ் கட்சியை ஒன்றிணையுங்கள் என சோனியா காந்திக்கு எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில் காட்டமாக கூறியுள்ளார் குலாம் நபி ஆசாத். அத்தோடு அவர் நிறுத்தவில்லை, காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகளை ராகுல்காந்தியின் பாதுகாவலர்களும், பி.ஏக்களும் எடுக்கிறார்கள் தனது 5 பக்க கடிதத்தில் ஆக்ரோஷத்தை கொட்டியிருக்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கட்சியில் எங்கெல்லாம் பிரச்சனை ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் பிரச்சனையை தீர்த்து வைக்க அனுப்பி வைக்கப்படும் காங்கிரசின் மூத்த தலைவராக அறியப்பட்டவர் குலாம் நபி ஆசாத். குறிப்பாக தேர்தல் நேரங்களில் தொகுதி பங்கீட்டில் ஏற்படும் சிக்கல்களை தீர்த்து வைக்க குலாம் நபி ஆசாத் அனுப்பிவைக்கப்படுவது வழக்கம். கடந்த 2011ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலின்போது, திமுக காங்கிரஸ் கூட்டணி அமைப்பதில் இழுபறி நீடித்தது. அப்போது காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளராக தமிழகம் வந்த குலாம் நபி ஆசாத், திமுக தலைவர் கருணாநிதியுடன் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி சிக்கலை தீர்த்து வைத்தார். திமுகவிடம் பேசி காங்கிரசுக்கு 63 தொகுதிகளை பெற்றுக்கொடுப்பதில் குலாம் நபி ஆசாத் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்பட்டது.
மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்ற பின் முதலமைச்சர் யார் என்பதில் சிக்கல் ஏற்பட்டால் அங்கும் குலாம் நபி ஆசாத்தை கட்சித் தலைமை அனுப்பி வைப்பது வழக்கம். அந்த அளவிற்கு சோனியாகாந்தி குடும்பத்தினரின் நம்பிக்கையை பெற்றவராகவும் கருதப்பட்டார் குலாம் நபி ஆசாத்.
நாட்டின் எந்த மாநிலத்திலிருந்தும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக நின்று வெற்றிபெறக்கூடிய அளவிற்கு கட்சியின் தேசிய முகமாக அறியப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர்தான் இந்த குலாம் நபி ஆசாத்.
மக்களவையில் தோல்வி அடைந்தால்கூட மாநிலங்களவை தேர்தலில் வாய்ப்பளித்து நாடாளுமன்றத்திற்கு மீண்டும் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைமையால் அழைத்துவரப்படும் அளவிற்கு அக்கட்சியில் முக்கியத்துவம் பெற்றிருந்தார். 9 முறை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், காங்கிரஸ் காரியக் கமிட்டியில் நீண்டகாலம் உறுப்பினராக இருந்துள்ளார்.
73வயதான குலாம் நபி ஆசாத் கடந்த 1949ம் ஆண்டு மார்ச் 7ந்தேதி ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் தோடா மாவட்டத்தில் உள்ள பலேஷா என்கிற சிறிய ஊரில் பிறந்தவர். 1973ம் ஆண்டு தனது 24வது வயதில் பலேஷா பிளாக் கமிட்டியின் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய குலாம் நபி ஆசாத் பின்னர், இரண்டே ஆண்டுகளில் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக ஆனார். 1980ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவராக மாறி தேசிய அரசியலுக்குள் நுழைந்தார். மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது ஜனதா கட்சி ஆட்சியை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் முன்னணி தளகர்த்தாவாக இருந்து அதற்காக சிறைவாசமும் அனுபவித்துள்ளார். அதன் எதிரொலியாக சஞ்சய் காந்தியுடன் நெருக்கமான நட்பைக் கொண்டிருந்தார். காஷ்மீரில் பிறந்தவராக இருந்தாலும் 1980ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவின் வாஷிம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
நேரு குடும்பத்தின் விசுவாசி
1982 இந்திராகாந்தி அமைச்சரவையில் சட்டத்துறை துணை அமைச்சராக இடம்பெற்ற குலாம் நபி ஆசாத் பின்னர், நரசிம்மராவ் ஆட்சி காலத்தில், விமானப் போக்குவரத்துதுறை, நாடாளுமன்ற விவகாரத்துறை உள்ளிட்ட முக்கிய இலாகாகளுக்கு அமைச்சராக பதவி வகித்துள்ளார். நேரு குடும்பத்தில் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி உள்ளிட்ட தலைவர்களின் நம்பிக்கையை பெற்ற குலாம் நபி ஆசாத் பின்னர்
சோனியாகாந்தி காலத்திலும் நேரு குடும்பத்தின் விசுவாசியாக தொடர்ந்தார். இதனால் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் அவர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக வலம் வந்தார்.
மேலும் மாநிலங்களவை தேர்தலில் குலாம் நபி ஆசாத்துக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. மாநிலங்களவை உறுப்பினராக 21 ஆண்டுகள் பதவி வகித்துள்ள குலாம் நபி ஆசாத், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக மட்டுமே 7 ஆண்டுகளுக்கும் மேல் பதவி வகித்துள்ளார்.
இடையே மாநில அரசியலுக்கு சிறிதுகாலம் திரும்பிய குலாம் நபி ஆசாத், 2002ம் ஆண்டு ஜம்முகாஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றிகரமாக வழிநடத்தினார். 2005ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை ஜம்முகாஷ்மீர் மாநில முதலமைச்சராகவும் அரியணை ஏறினார் குலாம் நபி ஆசாத். இப்படி காங்கிரஸ் கட்சியில் சுமார் 50 ஆண்டுகளாக நீண்ட பயணத்தை மேற்கொண்டு கட்சியின் மூத்த தலைவராக வலம் வந்துகொண்டிருந்த குலாம் நபி ஆசாத், தற்போது கட்சியில் மூத்த தலைவர்களுக்கு மரியாதை இல்லை, துதிபாடுபவர்களுக்குத்தான் மரியாதை எனக் கூறி காங்கிரசைவிட்டே வெளியேறி உள்ளார். தனது 50 ஆண்டுகால அரசியல் பயணத்தில் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு சிக்கல்களை தீர்த்து வைத்த குலாம் நபி ஆசாத், தற்போது முக்கியமான கட்டத்தில் அக்கட்சியிலிருந்து விலகி சர்ச்சைகளை தொடங்கி வைத்துள்ளார்.