ஹிண்டன்பர்க் அறிக்கையின் எதிரொலியால், பல லட்சம் கோடி சந்தை மதிப்பை அதானி நிறுவனங்கள் இழந்துள்ளன. மேலும் எல்.ஐ.சி. பாரத ஸ்டேட் வங்கி மற்றும் மியுச்சூவல் பண்ட் நிறுவனங்கள் செய்துள்ள முதலீட்டு அளவுகள் என்னென்ன? இது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
அரசின் பொதுத்துறை வசம் உள்ள இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம், பாரத ஸ்டேட் வங்கி , 32 மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள், பொதுத்துறை ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், எக்ஸிம் வங்கி, சிட்டி, நேஷனல் ஹவுசிங் வங்கி, நபார்டு உள்ளிட்ட நிறுவனங்களூம் அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கெளதம் அதானி தலைமையிலான அதானி குழுமத்தின் மீதான ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கை வெளியான நிலையில், அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு சரிவினைக் கண்டது. குறிப்பாக இந்த சரிவில் சில்லறை முதலீட்டாளர்கள் பெரும் இழப்பை சந்தித்தனர். எஸ் அண்ட் பி, ஜே.பி ,மார்கன் என பல தர மதிப்பீட்டு நிறுவனங்கள் அதானிக்கு நெகட்டிவ் தர மதிப்பை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றன. மேலும் பங்குச்சந்தையில் வர்த்தகத்தின் போக்கை நிர்ணயிக்கும் பட்டியலில் இருந்தும் அதானி நிறுவனங்கள் நீக்கப்பட்டுள்ளன.
இதனையும் படியுங்கள் : 24 நாட்களில் அதானியின் ரூ.12 லட்சம் கோடி அம்பேல்!
அதானி குழும பங்குகளில் பெரிய அளவில் முதலீடு செய்துள்ள மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களும் பெரும் சரிவினைக் கண்டுள்ளன. 32 மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் – 406 மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்துள்ளன. கடந்த ஜனவரி 24ம் தேதியன்று ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கை, வெளியானதை தொடர்ந்து, அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியினை சந்தித்து வருகின்றன. அதானி குழும பங்குகள் 12 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை இழந்துள்ளன.
இந்தியாவில் சுமார் 5 கோடி முதலீட்டாளர்கள் மியூச்சுவல் பண்டு எனப்படும் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். இந்த முதலீட்டில் பெருமளவு பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. அதிக வருமானம், விரைவான வளர்ச்சி என மியூச்சுவல் பண்ட் திட்டங்களின் விளம்பரத்திற்கேற்ப அதானி குழும நிறுவனங்களில் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
அதே போல்,அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியின் சொத்து மதிப்பும் 100 பில்லியன் டாலர்கள் குறைந்து விட்டது. ப்ளூம்பெர்க் உலக பணக்காரர்கள் பட்டியலில், 3 வது இடத்திலிருந்து, 25 வது இடத்திற்கு தள்ளப்பட்டார். பொதுத்துறை நிறுவனங்களான எல்.ஐ.சி யும், எஸ்பிஐயும் அதானி நிறுவனங்களில் செய்துள்ள முதலீடு, கடன் ஆகியவை, ஒட்டு மொத்த செயல்பாட்டில்,குறைவான அளவே என்றும், அதனால் பாதிப்பு எதுவும் இல்லை என சமாளிக்கும் விதமான பதிலை கூறுகின்றன.
எல்.ஐ.சி 36 ஆயிரம் கோடி ரூபாயும், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் 20 ஆயிரம் கோடி ரூபாய், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா – கடனாக 20 ஆயிரம் கோடி ரூபாய், இதர வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் மற்றும் முதலீடாக சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் என மொத்தம் பொதுமக்களின் பணம் பல வகைகளில் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதானி நிறுவனங்களில் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதானி குழுமத்தில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் முதலீட்டை பார்க்கும் போது, எஸ்.பி.ஐ மியூச்சுவல் பண்ட் 4 ஆயிரத்து 748 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. அதே போல் யூடிஐ 1868 கோடி ரூபாய், கோடக் மகேந்திரா 1593 கோடி ரூபாயும், நிப்பான் இந்தியா 1262 கோடி ரூபாய், ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் 1203 கோடி ரூபாயும், ஹெச்.டி.எஃப்.சி 761 கோடி ரூபாயும், இதர மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் 6 ஆயிரம் கோடி ரூபாய் என ஒட்டு மொத்தமாக மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்துள்ளன.
இதனால் இனி அதானி வரலாற்றில் ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு முன்பு மற்றும் ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பின்பு எனவே பார்க்கப்படும்.
–ரா.தங்கபாண்டியன்,நியூஸ் 7 தமிழ்