உண்மை கண்டறியும் சோதனை எப்படி நடக்கிறது?

உண்மை கண்டறியும் சோதனை எப்படி நடக்கிறது? என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது? சோதனையின் முடிவுகளை வைத்து குற்றத்தை தீர்மானிக்க முடியுமா? என்பது போன்ற விவரங்களை விளக்குகிறது இந்த செய்தி… 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம்…

உண்மை கண்டறியும் சோதனை எப்படி நடக்கிறது? என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது? சோதனையின் முடிவுகளை வைத்து குற்றத்தை தீர்மானிக்க முடியுமா? என்பது போன்ற விவரங்களை விளக்குகிறது இந்த செய்தி…

2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் இதுவரை எந்த துப்பும் கிடைக்காமல் விசாரணை 10 ஆண்டுகளாக சென்று கொண்டிருக்கிறது. இந்த முக்கிய கொலை வழக்கு காவல்துறையிடம் இருந்து சிபிசிஐடிக்கு சென்றது. எந்த முன்னேற்றமும் இல்லாததால் சிபிஐக்கு மாற்றப்பட்டது. ஆனாலும் அங்கும் இதே நிலை தொடர்ந்ததால் மீண்டும் வழக்கு சிபிசிஐடி கைக்கு சென்றது. தற்போது சிபிசிஐடி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொலையாளிகளை கண்டறிய கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ராமஜெயம் கொலை வழக்கில் 12 பேரிடம் உண்மையை கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்றத்தில் அனுமதியை சிபிசிஐடி பெற்றுள்ளது. உண்மையை கண்டறியும் சோதனைக்கு 12 பேரும் சம்மதித்துள்ளனர். உண்மையை கண்டறியும் சோதனை என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். திரைப்படங்களில் கூட பார்த்திருப்போம். ஆனால் அது பற்றி முழுமையாக அறிந்து இருப்பது என்பது இல்லை. அது பற்றி முழுமையாக விவரிக்கிறார் சட்டம் சார்ந்த மருத்துவத்துறை உதவி பேராசிரியர் துவாரகேஷ் அப்பாராஜ்.

உண்மை கண்டறியும் சோதனையில் பல்வேறு முறைகள் இருப்பதாகவும், காவல்துறையால் பயன்படுத்தப்படும் முறை பாலிகிராப் எனப்படும் முறை என்றும் துவாரகேஷ் அப்பாராஜ் கூறினார். பொய் சொல்லி இருக்கிறாரா? என்பதைக் கண்டறியவே இந்த முறை என்றும் இதனை வைத்து குற்றவாளி என்று தீர்மானிக்க முடியாது என்றும் துவாரகேஷ் குறிப்பிட்டார்.

உண்மையை கண்டறியும் சோதனைக்கு “சோடியம் பென்டத்தால்”, “சோடியம் அமிட்டால்” போன்ற மயக்க மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. உண்மையை கண்டறியும் சோதனை என்பது காவல்துறையினர் ஒரு அறிவியல் ஆதாரம் அல்லது சாட்சியாகத்தான் பார்க்க முடியும். இதனை வைத்து குற்றப்பத்திரிகையில் குற்றம் சுமத்தப்பட்டவரின் வாக்குமூலமாகத்தான் பதிவு செய்ய முடியும். இதனை வைத்து குற்றம் சுமத்தப்பட்டவருக்கு தண்டனை வாங்கி கொடுக்க முடியாது. ஆனால் இந்த 90 சதவீதம் காவல்துறை வழக்கு விசாரணைக்கு உதவலாம். வழக்கு திசை திரும்பவும் வாய்ப்பு இருப்பதாக சட்ட நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

கொலைகள், ஆதாய கொலைகள், பாலியல் வன்கொடுமை வழக்குகளில் உண்மையை கண்டறிவதற்காக இந்த சோதனையை காவல்துறை நீதிமன்ற அனுமதி பெற்று நிகழ்த்தி வருகிறது. ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேகத்திற்குள்ளாகி உள்ள 12 பேர் ஏற்கனவே கொடுத்த வாக்குமூலத்தையும், உண்மையை கண்டறியும் சோதனையில் என்ன வாக்குமூலம் அளிக்கிறார்கள் என்பதனை சிபிசிஐடி போலீசார் ஒப்பிட்டு பார்க்க உள்ளனர். அதனை வைத்து வழக்கின் அடுத்தக்கட்ட நகர்வுகள் இருக்கும் என்று சிபிசிஐடி தரப்பில் கூறப்படுகிறது.

இது தொடர்பாக விளக்கமாக பேட்டி அளித்த ஓய்வு பெற்ற காவல்துறை டிஜிபி ரவி, உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்துபவரிடம் பல்வேறு விதமாக விசாரணை  நடத்தப்படும் என்று கூறினார்.  கேள்வி கேட்பதிலேயே வழக்கமான கேள்விகள், மாறுபட்ட கேள்விகள், மற்றும் குற்றம்  அதுசார்ந்த கேள்விகள் என்று கேட்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதில் கிடைக்கும் தரவுகள் ஏற்கனவே உள்ள வாக்குமூலம், விசாரணையுடன் ஒத்துப் போகிறதா என்று ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் என்றும் இது விசாரணைக்கு உதவும் அறிவியல் பூர்வமான கூடுதல் ஆதாரம் தான் என்றும் இதுவே முடிவாகிவிடாது என்றும் ஓய்வு பெற்ற டிஜிபி ரவி தெரிவித்தார்.

உலக அளவில் உண்மையை கண்டறியும் சோதனை அதிகம் நடப்பது அமெரிக்காவில் தான். ராணுவத்திற்கு ஆட்கள் சேர்க்கும் போது இந்த நடைமுறை பயன்படுத்தப்படுவது அதிர்ச்சியான தகவல். இந்தியாவை பொறுத்தவரையில் இந்த நடைமுறைக்கு மனித உரிமை ஆணையம் பல்வேறு வழிகாட்டுதல்களை முன்வைத்துள்ளது. அதனை முறையாக பின்பற்றியும், நீதிமன்ற உத்தரவை முறையாக பெற்ற பிறகே இதனை செயல்படுத்த முடியும் என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு.

  • ஆர்.சுப்பிரமணியன் 
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.