தமிழக உரிமைகளை பறிக்கும் ஆளுநரின் செயல்பாட்டினைத்தான் விரும்புகிறீர்களா என அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள பரமன்குறிச்சியில் நடைபெற்ற
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பிரதிநிதிகள் கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவின் இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலினும், மகளிர் அணி செயலாளராக ஹெலன் டேவிட்சனும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறினார். கட்சிக்காக அவர்கள் ஆற்றிய பணிகளுக்காகவே அந்த பதவிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கனிமொழி கூறினார்.
தமிழக ஆளூநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழினிச்சாமி கூறிய கருத்துக்கு பதிலளித்த கனிமொழி, அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக உரிமைகள் ஆளுநரிடம் அடகு வைக்கப்பட்டிருந்ததாக விமர்சித்தார். தமிழக உரிமைகளை பறிக்கும் ஆளுநரின் செயல்பாட்டினை அதிமுகவினர் பாராட்டுவதாக குற்றம்சாட்டிய கனிமொழி, தமிழக உரிமைகள் பறிக்கப்படுவதைத்தான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விரும்புகிறாரா என கேள்வி எழுப்பினார்.







