அதிமுகவில் இரட்டை தலைமை தொடருமா ? அல்லது ஒற்றைத் தலைமைக்கு மாறுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளதால் அக்கட்சியின் எதிர்காலம் என்னவாகும் என்ற கவலை ரத்தத்தின் ரத்தங்களுக்கு சற்று அதிகமாகவே காணப்படுகிறது. அதுகுறித்த அலசுகிறது இந்த ரிப்போர்ட்.
அதிமுக அமைப்பு ரீதியான மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. அதன்படி, 25 மாவட்டங்களுக்கான முதல்கட்ட தேர்தல் கடந்த மார்ச் 27ஆம் தேதி நடந்தது.இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், தேனி, ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களில் அடங்கிய அமைப்பு ரீதியான 25 மாவட்டங்களுக்கு 2-ம் கட்டமாக ஏப்ரல் 11-ம் தேதி தேர்தல் நடந்தது. அதேபோல், திருச்சி, மதுரை, பெரம்பலூர், திண்டுக்கல், அரியலூர், தஞ்சாவூர், விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் அடங்கிய 25 மாவட்டங்களுக்கு ஏப்ரல் 16-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, அதிமுகவின் அமைப்பு ரீதியான 75 மாவட்டங்களுக்கு செயலாளர்கள், நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் ஏப்ரல் 19, 21-ம் தேதிகளில் நடத்தப்பட்டதுஅதன்பிறகு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, டெல்லி, அந்தமான் ஆகிய பிற மாநிலங்களுக்கான கிளை, பஞ்சாயத்து, வட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதியும், தொகுதி, பகுதி, நகரம், மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகளுக்கான தேர்தல் 24-ம் தேதியும் நடைபெற்றது.
இந்த தேர்தல் செல்லுமா ? செல்லாதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடந்த 14ஆம் தேதியன்று அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுக மாவட்ட செயலாளர்கள் சிலர் ஒற்றை தலைமை பிரச்சனை முதலில் பேசினார். இதுகுறித்து எவ்வித தகவலும் தெரியாதநிலையில் அக்கூட்டத்தில் ஓபிஎஸ் அமைதியாக இருந்து விட்டு வெளியேறினார். அக்கூட்டத்தில் பேசிய 40 மாவட்டச் செயலாளர்களில் 30க்கும் மேற்பட்டோர் ஒற்றை தலைமை வேண்டும் என குறிப்பிட்டதாக தகவல் வெளியாகின. இதனை கூட்டம் முடிந்து வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒற்றை தலைமை குறித்து விவாதித்தோம். இதுவே பெரும்பான்மையானவர்களின் கருத்தாக உள்ளது என்றார்.
அதன் பின்னர் ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே பெரும் பிளவு ஏற்பட்டது. இந்த விவகாரம் குறித்து எவ்வித கருத்து தெரிவிக்காமல், பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் தனது ஆதரவாளர் எண்ணிக்கையை உயர்த்துவதிலேயே கண்ணும் கருத்துமாக எடப்பாடி இருந்தார். ஓபிஎஸ் நீண்ட நாட்களுக்கு பிறகு பத்திரிக்கையாளர்களிடம் மனம் திறந்து பேசினார். ஒற்றை தலைமை விவகாரம் குறித்து பொதுவெளியில் ஜெயக்குமார் பேட்டி அளித்திருக்க கூடாது என்றார். மேலும் ஒற்றைத்தலைமை என்பது தேவையில்லை என்ற தொணியில் பேசினார்.
இது ஒருபுறமிருக்க தமது ஆதரவாளர்கள் மூலம் சென்னை உயர்நீதிமன்ற கதவை தட்டிய ஓ பன்னீர் செல்வம், இரவோடு இரவாக பொதுக்குழுவை அதிமுக திட்டமிட்டப்படி நடத்தி கொள்ளலாம். அதேபோல் தீர்மான குழுவினர் இயற்றியுள்ள 23 தீர்மானங்களை தவிர புதிதாக எவ்வித தீர்மானமும் நிறைவேற்றக்கூடாது என இடைக்கால உத்தரவை பெற்றார்.
இந்நிலையில் அதிமுகவின் எதிர்காலம் என்னவாகும் என அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் கேட்டபோது, இதுபோன்ற சிக்கல் அதிமுகவிற்கு புதிதல்ல. எம்ஜிஆர் மறைவின்போது கட்சியின் பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. அப்போது அதிமுகவில் இருந்த திருநாவுக்கரசர் பொதுக்குழுவைக் கூட்டி பொதுச்செயலாளர் தாம்தான் என தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்தார். ஜெயலலிதாவோ தாம் கட்சியின் விதிப்படி தொண்டர்களால் பொதுச்செயலாளாராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். எனவே தம்மை அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரிக்க வேண்டும் என்றார். இதனை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், ஜெயலலிதாவையே அங்கீகரித்தது.
அதேநிலை தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி தரப்பால் ஓ.பன்னீர்செல்வத்தை அவ்வளவு எளிதாக கழட்டிவிட முடியாது என்றார்.
மேலும், அதிமுகவில் நடைபெற்று வரும் அனைத்து விஷயங்களையும் பிரதமர் மோடியும், பாஜகவின் தலைமையும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. குடியரசு தலைவர் தேர்தல் முடிவடைந்த பின்னர் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக அவர்கள் களமிறங்குவார்கள் என்றார்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் உருவாக்கப்பட்டதுதானே, அப்போது அதிமுக தொண்டர்களால் அந்த பதவி உருவாக்கப்படவில்லையே என்ற கேள்விக்கு பதில் அளித்த ரவீந்திரன் துரைசாமி, அப்போது அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் கையில் கட்சி ஒப்படைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இடைக்கால தேர்வாக அப்படி ஒரு முடிவு மேற்கொள்பட்டது. அதன்பின்னர் தற்போது இந்த இரு பதவிகளும் தொண்டர்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதனை ரத்து செய்யும் அதிகாரம் பொதுக்குழுவிற்கு கிடையாது என அவர் கூறினார்.
அரசியல் ரீதியாக அதிமுக ஒற்றை தலைமைக்கு செல்வதை பாரதிய ஜனதா கட்சி என்றும் விரும்பாது. அவர்களை பொறுத்தவரை அதிமுகவில் இரட்டை தலைமை இருந்தால் மட்டுமே தேர்தல் நேரத்தில் அதிக தொகுதிகளை பெறுவதற்கு அது எளிதாக இருக்கும். தற்போது அதிமுகவில் பன்னீர் செல்வம் மட்டுமே பாஜக அனுதாபி என்ற தோற்றம் உருவாக்கப்பட்டு வருகிறது. உண்மையில் எடப்பாடி பழனிசாமியும் பாஜக அனுதாபிதான். பாஜகவின் தயவின்றி அவரால் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது என்பது அவருக்கும் நன்றாக தெரியும். குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக ஆதரவு கேட்பதற்கு முன்னரே நிபந்தனையற்ற ஆதரவை கொடுக்க முன்வந்தவர்கள் எடப்பாடி பழனிசாமியும் ஒருவர் என்றார் ரவீந்திரன் துரைசாமி.
தற்போதைய அரசியல் சூழலில் அதிமுகவில் இரட்டை தலைமை தொடரவே அதிக வாய்ப்புகள் உள்ளன. இதுவே எனது கணிப்பு என்கிறார் ரவீந்திரன் துரைசாமி.
இராமானுஜம்.கி











